×

உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்...!: இன்று (ஜன.9) வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

இந்தியாவில் படித்து முடித்து விட்டு, குறைவோ அல்லது நிறைவான ஊதியமோ, இங்கேயே பணியாற்றுபவர்கள் அதிகம். ஆனால் வறுமையான வீட்டுச்சூழல், வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புதல், உயர்படிப்பு மூலம் வெளிநாட்டில் இருக்கும் உயர்சம்பள பணி வாய்ப்பு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வெளிநாட்டுக்கு சென்று ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 3.10 கோடி பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை ஆண்டுதோறம் ஜன.9ம் தேதி எண்ணிப்பார்க்கும் ஒரு தினம்தான் வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம். நம் தேசப்பிதாவான மகாத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து, 1915ம் ஆண்டு, ஜனவரி 9ம் தேதி இந்தியா வந்தார். இந்த நாளைத்தான் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு வாழ் இந்தியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

விழாவில் வெளிநாடுவாழ் இந்தியர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ‘பிரவசி பாரதிய சம்மான்’ விருதுகள் வழங்கப்படுகின்றன.   கடந்த 2003, 2004ம் ஆண்டுகளில் புதுடில்லி, 2005ல் மும்பை, 2006ல் ஐதராபாத், 2007, 2008ல் புதுடில்லி, 2009ல் சென்னை, 2010, 2011ல் புதுடில்லி,  2012ல் ஜெய்ப்பூர், 2013ல் கொச்சி, 2014ல் புதுடில்லி, 2015ல் குஜராத், 2017ல் பெங்களூரு, 2018ல் சிங்கப்பூர், 2019ல் வாரணாசி ஆகிய இடங்களில் இவ்விழா நடந்துள்ளது. மேலும், மாநாடும் நடைபெறும். கல்வி, தகவல் தொழில்நுட்படம், தொழில்துறை உட்பட பல துறைகளில் சிறந்த விளங்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர், விழாவில் கவுரவிக்கப்படுவார். மாநாட்டின்போது, இந்தியாவின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில்துறை தொடர்பான விஷயங்கள் ஆராயப்படும்.

இந்தியாவில் இருந்து ஏனைய நாடுகளுக்குச் சென்று குடியேறிய இந்தியர்களின் புதிய தலைமுறையினர் பலர் கல்வி, வர்த்தகம், அரசியல், விளையாட்டு, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் அங்கு தலைமைப் பதவிகளை வகிப்பதோடு பல சாதனைகளையும் செய்து வருகின்றனர். அவ்வாறு சாதனை படைத்த பிரமுகர்கள் இத்தகைய மாநாடுகளில் பங்கேற்று, தங்களது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கி சிறப்பு விருந்தினர்களாக முக்கியத்துவம் பெறுகின்றனர். இவ்வாறு சிறப்பு பெற்ற ஒருவர் இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். மாநாட்டு நிகழ்ச்சிகளின்போது, இந்தியாவின் வளர்ச்சியும் வாய்ப்புகளும், மரபுரிமை, இந்தியர் புலச்சிதறல் உள்ளிட்ட விஷயங்கள் பொது அமர்வுகளில் ஆராயப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொலைத்தொடர்பு புரட்சியினால் உந்தப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்தின் அதிநவீன முன்னேற்றங்களைக் கையாண்டு மூலதனம் மற்றும் எல்லை கடந்த மனிதவள மாற்றீடுகள் என்பனவற்றின் மூலம் கடல் கடந்து சகல நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

கல்வி, தொழில்நுட்பத்துறையிலும் முதலீட்டு வாய்ப்புகளும் ஆராயப்பட்டன. இந்தியாவின் பொது மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பு, பொது சுகாதாரத்துறையின் அபிவிருத்தியில் வெளிநாட்டு இந்தியர்களை ஈடுபடுத்துதல் ஆகிய தலைப்புகளில் கடந்த மாநாடுகளில் ஆராயப்பட்டன. இந்தத் துறைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவுவதில் வெளிநாட்டு இந்தியர்களின் ஒத்துழைப்பு பற்றியும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன. மேலும், இவர்களுக்கு ஓட்டுரிமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவர்களில் பலர் இந்தியா வந்து ஓட்டளிப்பவர்கள் சிலர் மட்டுமே; எனவே, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் தபால் முறையில், மின்னணு முறையில் வாக்களிக்கும் உரிமை சட்டம் குறித்து மக்களவையில் விவாதிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Overseas ,Land ,Indian ,Indians , Your Value,Foreign Land, Today , day,Indians living abroad
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...