×

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்புகள் அறுவடை: பொங்கல் பரிசு தொகுப்புக்கு அனுப்பி வைப்பு

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்புகள் நேற்று அறுவடை நடந்தது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள காலி இடத்தில் வெண்டைக்காய், கத்தரி, தக்காளி, கேரட், மரவள்ளிக்கிழங்கு, சோளம், கம்பு, நெல்லி, தட்டைப்பயிர் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் தானிய வகைகள் உள்ளிட்டவை சுமார் 22 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த விவசாய பணிகளை சிறைவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு என கரும்பு பயிரிடப்படும்.

அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிறை வளாகத்தில் உள்ள சுமார் ஒன்னேகால் ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த கரும்புகள் அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து நேற்று கரும்புகள் அறுவடை செய்யும் பணி துவங்கியது. சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். எஸ்பி சங்கர், சிறை அங்காடி கண்காணிப்பாளர் திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கரும்புகள் தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பை திட்டத்தில் கரும்பு வழங்குவதற்காக அறுவடை செய்யப்படுகிறது. 2 அடி கரும்புகளாக அரசுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த அறுவடையில் சுமார் 40 ஆயிரம் எண்ணிக்கைகள் கரும்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதுபற்றி சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறியதாவது: நன்னடத்தை முறையில் உள்ள சிறைவாசிகள் வெளிப்பணி குழுவில் பணியாற்றுகின்றனர். அனைத்து மத்திய சிறைகளிலும் திறந்தவெளி சிறைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றும் நன்னடத்தையுள்ள சிறைவாசிகளுக்கு ஒரு நாள் பணிபுரிந்தால், ஒரு நாள் தண்டனை காலத்தில் குறைப்பு வழங்கப்படும். பணிக்கான உரிய ஊதியமும் அவர்களுக்கு வழங்கப்படும். பெரும்பாலோனர் கிராமப்புறத்தினர். அவர்கள் திருந்தி சமுதாயத்தோட இணைந்து வாழ்வதற்கான வழியாக இந்த வேளாண்மை முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மீன்குஞ்சுகள் சிறை சந்தை மூலம் விற்பனை
டிஐஜி கூறுகையில், திருச்சி சிறையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். இந்த வருடம் தட்டுப்பாடின்றி விவசாயம் செய்ய முடியும். பண்ணை குட்டைகளில் 4,500 மீன்குஞ்சுகள் விட்டுள்ளோம். வளர்ந்து வருகிறது. அவற்றை சிறை சந்தை மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : Harvesting ,prisoners ,Trichy Central Prison Harvesting ,Trichy Central Prison , Trichy Central Prison, Prisoners, Cultivated Sugarcane
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...