×

வயலில் காவல் தெய்வங்களை வழிபட மண் குதிரை தயாரிப்பு பணிகள் மும்முரம்: நெல் அறுவடை துவக்கம் எதிரொலி

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர். இதையடுத்து வயலில் காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபட தேவையான குதிரை, மண் அடுப்பு, சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகள், கிழக்கு கரை கால்வாய் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் அறுவடை பணிகளை துவக்கியுள்ளனர். நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, கோரையாறு, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் தொடர் மழை காரணமாக, நெல் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.

இதையடுத்து அறுவடையை துவக்கியுள்ள விவசாயிகள், வயலில் காவல் தெய்வங்களை வழிபட தயாராகி வருகின்றனர். மாவட்டத்தில் பல இடங்களில் அறுவடை முடிந்த வயல்களில் காவல் தெய்வமாக கருப்பனாருக்கு சிறிய கோயில் அமைத்து,  குதிரை சிலை வைத்து, அறுவடை செய்த நெல்லை கொண்டு படையல் வைத்து பூஜை செய்வது வழக்கம். தை மாத இறுதியில் நடைபெறவுள்ள கருப்பனார் பண்டிகைக்காக, நாமகிரிப்பேட்டை பகுதியில் மண் குதிரை சிலை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மண் சிலை வடிவமைக்கும் தொழிலாளி  ராமசாமி கூறுகையில், ‘ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு பின், விளைநிலத்தில் காவல் தெய்வமாக குதிரையுடன் கூடிய கருப்பனார் சிலை வைத்து பூஜை செய்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டு தை பண்டிகைக்காக ₹500 முதல் ₹1000 வரையிலான மண் சிலைகள் தாயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஒரு மண் குதிரை ₹350 முதல் ₹400 வரையும், கருப்பனார் சிலை ₹500 முதல் ₹600 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. நல்ல மழை பெய்து நெல் விளைச்சல் அதிகரித்துள்ளதால், வயலில் காவல் தெய்வ வழிபாடு நடத்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்,’ என்றார்.

Tags : Field , Worship , goddesses , field
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது