×

சீராக குடிநீர் வழங்கக்கோரி பாளையில் காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

நெல்லை: சீராக குடிநீர் வழங்கக்கோரி பாளை- திருச்செந்தூர் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பாளையில் உள்ள சம்பக்கடை தெரு, முனையாடுவார் நாயனார் தெரு, பரிசுத்த ஆவி தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த 15 தினங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பைப் ரிப்பேர் எனக்காரணம் காட்டி தண்ணீர் வரத்து தடைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையீட்டும் குடிநீர் வரவில்லை. இதனால் ஆவேசமடைந்த மக்கள் காலி குடங்களுடன் பாளை ஜவஹர் மைதானம் அருகே திரண்டு வந்தனர்.
பின்னர் பாளை - திருச்செந்தூர் சாலையில் குடங்களை அடுக்கிவைத்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக மாவட்டப் பிரதிநிதி ரைமண்ட், திமுக மீனவர் அணி அமைப்பாளர் ஜூடு, அருள்வின் ரொட்ரிகோ உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். போராட்டத்தில் திரளாகப் பங்கேற்ற குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோர் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 தகவலறிந்து விரைந்து வந்த பாளை போலீஸ் உதவி கமிஷனர் பெரியசாமி, இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் மற்றும் போலீசார் சமரசப்படுத்தினர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த  மாநகராட்சி பொறியாளர்களும் உடனடியாக லாரிகளில் தண்ணீரை அனுப்பிவைப்பதாக சமாதானப்படுத்தினர். ஆனால், இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் ‘‘லாரி தண்ணீர் வேண்டாம். குழாய்களில் குடிநீர் சீராக வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் பழுதான குழாய்களை உடனடியாக சரிசெய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். சுமார் அரைமணி நேரம் அங்கு நடந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road , Public road ,stirrups ,empty ,water supply
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...