பொங்கல் பண்டிகைக்கு 6 நாளே உள்ள நிலையில் வண்ண பானை, பனை ஓலை விற்பனை களை கட்டியது

நெல்லை: தைப்பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு நெல்லையில் பனை ஓலை மற்றும் வண்ண பொங்கல் பானை விற்பனை களைகட்டியது. தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நெல்லையில் வர்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பாளை நீதிமன்றம் அருகே மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் முருகன் என்பவர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு அரிசி உள்ளிட்ட பொங்கல்படி கொடுப்பவர்கள் வர்ணம் தீட்டப்பட்ட மண் பானைகளில் அவற்றை வைத்து கொடுப்பார்கள். இதற்காக ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. வண்ணப்பானை பெரிய அளவில் உள்ளது ரூ.500 ஆகும். சிறிய பானைகள் ரூ.250, ரூ.300 என்ற விலையில் உள்ளன. வர்ணம் தீட்டப்படாத மண்பானைகள் ரூ.80 விலையில் இருந்து விற்கப்படுகிறது என்றார்.

இதுபோல் தனி அடுப்புக்கட்டி 3 அடுப்புக்கட்டி உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.பொங்கல் விடுவதற்கான பனை ஓலை விற்பனை கடைகளும் ஏராளமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் தோன்றியுள்ளன. ஒரு ஓலை ரூ.25 என்ற விலையில் விற்கப்படுகிறது. விவசாய பணி நடப்பதால் பனை ஏற தொழிலாளர் தட்டுப்பாட்டால் ஓலை வெட்டுவதற்கு கூலி அதிகம் செலவாவதாகவும் வாகனங்களில் எடுத்து வருவதற்கான கட்டணமும் உயர்ந்துள்ளதால் ஓலை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ஓலை வியாபாரிகள் கூறினர். அடுத்து வரும் நாட்களில் ஓலையில் தேவைக்கு ஏற்ப விலை கூடலாம் அல்லது குறையாலும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகைக்கு உரிய பொருட்கள் சந்தைகளுக்கு வரத்தொடங்கியுள்ளதால் பொங்கல் பண்டிகை  களைகட்டத்தொடங்கியுள்ளது.

Tags : festival ,Pongal , 6 days , Pongal festival, color pots , palm tiles , built
× RELATED புனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா