×

குமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற பைக்கில் சென்று விபத்தில் உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவள்ளூரில் ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்த இளைஞர்களுக்கு முதல்வர் பாராட்டையும் தெரிவித்தார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பிராங்கிளினுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண விதி வழங்க முதலவர் பேரவையில் ஆணையிட்டுள்ளார். மேலும் 3 இளைஞர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவியும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இதனிடையே கன்னியாகுமரியில் சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் வில்சனை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். கொன்றவர்களை கைது செய்ய தென்மண்டல ஐஜிக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பேரவையில் தகவல் அளித்தார். மேலும் எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.ஐ. வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் எஸ்.ஐ. வில்சன் வழக்கு புலன் விசாரணையில் உள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

திருவள்ளூரில் ஆட்டோவில் பெண் கடத்தப்பட்ட விவகாரம்

திருவள்ளூர் அடுத்த மப்பேடு கூட்டுச்சாலையில், போலீஸ் நிலையம் அருகே கடந்த 26ம் தேதி இரவு 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி நரசிங்கபுரம் செல்ல வேண்டுமென கூறியுள்ளார். ஆட்டோ டிரைவரும் அந்த இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார். அப்போது ஆட்டோவில் ஏற்கனவே நான்கு வாலிபர்கள் இருந்தனர். ஆனால் ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல், கொண்டஞ்சேரி பகுதியிலிருந்து கடம்பத்துார் செல்லும் சாலையில் வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூச்சலிட்டார்.

ஆனால், ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. இளம்பெண்ணின் அலறலை கேட்டு, கொண்டஞ்சேரி பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள் யாகேஷ், ஈஸ்டர், வினித், துரைராஜ் மற்றும் சார்லி ஆகியோர், தங்களது பைக்குகளில் ஆட்டோவை விரட்டி சென்றனர். இந்நிலையில் ஆட்டோவில் இருந்த இளம்பெண் சாலையில் குதித்தார். இதையடுத்து ஆட்டோ நிற்காமல் சென்றது. இதையடுத்து இரு பைக்குகளில் சென்ற இளைஞர்கள் ஆட்டோவை முந்தி நிறுத்த முயன்றனர். ஆனால், ஆட்டோவை ஓட்டிச்சென்ற வாலிபர், பைக்குகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இதில், பைக்கில் இருந்து விழுந்த தியாகராஜன் மகன் யாகேஷ்(22) இறந்தார். மேலும் இந்த விபத்தில் பிராங்கிளினுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது.

குமரியில் எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகுசாலையில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வில்சன் எனும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈடுபட்டிருந்தார்.இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை நோக்கி நான்கு முறை சுட்டுவிட்டு தப்பியோடினர்.துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் வில்சன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.

Tags : Palanisamy SI ,Kumari Wilson ,Palanisamy ,CM , Kumari, S.I. Wilson, Murder, Chief Minister Palanisamy, Sponsored by Yagesh
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...