×

வீடு மாறிட்டீங்களா? காஸ் விநியோகஸ்தரிடம் உடனே முகவரி மாற்றுங்க

* விபத்தில் உயிரிழப்பு நேர்ந்தால் ரூ6 லட்சம் இழப்பீடு
* காஸ் இணைப்பு வைத்துள்ளவர்கள் ‘அலர்ட்’

வேலூர்: காஸ் இணைப்பு வைத்துள்ளவர்கள் வாடகை வீடு மாறிவிட்டால் உடனே காஸ் விநியோகஸ்தரிடம் கூறி முகவரி மாற்றிவிடுங்கள். இல்லாவிட்டால் காஸ் கசிவு விபத்தில் உயிரிழப்பு நேர்ந்தால் ரூ6 லட்சம் இழப்பீடு கிடைக்காது.
நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான வீடுகளில் மண்ணெண்ணெய் ஸ்டவ், விறகு அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தித்தான், வீடுகளில் பெண்கள் சமையல் செய்வார்கள். இதில் பெரும்பாலான கிராமத்து பெண்கள் அடுப்புக்கு பயன்படுத்த விறகுகள் வெட்டி வருவதற்கு காடுகளுக்கு சென்றதும் உண்டு.

இப்படி பெண்கள் சமையல் ெசய்வதற்கே கடும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். இதனைபோக்கும் விதமாக திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசும் இலவச காஸ் இணைப்பு வழங்கி வருகிறது. தற்போது காஸ் இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதேசமயம் அதிகளவிலான வீடுகளில் காஸ் இணைப்புகள் பெற்றிருந்தாலும், பராமரிப்பின்றி பெரும்பாலான வீடுகளில் காஸ் கசிவு ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது காஸ் ஏஜென்சியின் கடமையாக உள்ளது. எனவே வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு மாறியவர்களாக இருந்தாலும், வாடகை வீட்டில் இருந்து மற்றொரு வாடகை வீட்டிற்கு மாறினாலும் உடனடியாக காஸ் விநியோகஸ்தரிடம் கூறி தற்போது உள்ள வீட்டு முகவரியை அப்டேட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காஸ் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் ஒரு பைசா கூட இழப்பீடு கிடைக்காது எனவே மக்கள் உடனே முகவரியை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து எல்பிஜி எரிவாயு விற்பனை பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடுமுழுவதும் காஸ் இணைப்பு பெற்றுள்ள மக்கள் அனைவரும் வாடகை வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கோ, வாடகை வீட்டில் இருந்து சொந்தவீட்டிற்கோ மாறினால், அவர்கள் உடனடியாக காஸ் விநியோகஸ்தரிடம் கூறி, தற்போது வசித்து வரும் வீட்டின் முகவரியை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி மாற்றாவிட்டால் காஸ் கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டால் ஒரு பைசா கூட இழப்பீடு கிடைக்காது. ஒரு வீட்டில் ஒருவர் காஸ் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ6 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

இப்படி ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் தலா ரூ6 லட்சம் வீதம் ரூ30 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். பொருட்சேதம் ஏற்பட்டால் ₹2 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். காஸ் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டால் அந்த குடும்பத்தினர். அதுகுறித்து உடனடியாக காஸ் ஏஜென்சிக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிப்பார்கள். பின்னர் அவர்கள் ஆய்வு செய்வர். இதையடுத்து அவர்கள் மூலமாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் ஆய்வு செய்வர். இதையடுத்து உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ₹6 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்  

மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை
காஸ் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துவிட்டு செல்கின்றனர். பின்னர் போலீசார் தகவலறிந்து வழக்கு பதிவு செய்கின்றனர். மேலும் எந்தவிதமான தீ விபத்து, உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வருவாய்த்துறை சார்பில் அரிசி, வேட்டி, சேலைகள் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுகிறது. ஆனால் காஸ் ஏஜென்சி மூலம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்றால் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே அரசும், காஸ் ஏஜென்சி நிறுவனங்களும் காஸ் கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டால் இழப்பீடு பெறுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இழப்பீடு பெற தேவையான ஆவணங்கள்
காஸ் கசிவால் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், இழப்பீடு பெறுவதற்கு முதலில் காஸ் ஏஜென்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்நிலையத்தில் வழங்கப்பட்ட எப்ஐஆர் நகல், ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவை கட்டாயம் தேவை. இதில் மிக முக்கியமானது விபத்து நடந்த வீட்டின் முகவரியில் காஸ் இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.


Tags : house ,Gas Distributor , Cause, change address, compensation
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?