×

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி: உடனே சீரமைக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாநகராட்சி உபைதுல்லா பஸ் நிலையமான பழைய பஸ் நிலையம் நகரின் பிரதான பஸ் நிலையமாக விளங்கி வந்த நிலையில், வேலூர் நகரின் மக்கள் பெருக்கம், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேலூர் செல்லியம்மன் கோயில் அருகில் கூட்டுறவு பழத்தொழிற்சாலை வளாகத்தில் புதிய பஸ் நிலையம் ஏற்படுத்தப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதேநேரத்தில் பழைய பஸ் நிலையம் புறநகர் பஸ் நிலையமாக தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கிருந்து வேலூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் நவீன பஸ் நிலையமாக ₹46 கோடியில் விரைவில் உருமாற உள்ளது. இப்பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளது. அப்போது வேலூர் பழைய பஸ் நிலையம் போக்குவரத்து நெரிசலுடன், மக்கள் நெரிசலுடனும் பரபரப்பாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் நவீன கட்டண கழிப்பிடம் அருகில் பஸ் நிலையத்தின் இருபகுதிகளை இணைக்கும் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன.

நீண்ட காலமாக உள்ள இப்பள்ளங்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. அதேபோல் பஸ் நிலையத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை வழியாக அண்ணா சாலைக்குள் பஸ்கள் செல்லும் பாதையிலும் பள்ளங்கள் உள்ளன. இவற்றையும் சீரமைக்கவில்லை.
இதனால் பொதுமக்களும், பஸ் டிரைவர்களும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, இப்பள்ளங்களை சீரமைத்துத்தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : tragedy ,Vellore ,bus station , Public tragedy ,Vellore ,old bus, station
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...