×

கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் நடை பாதை அமைக்க திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னை: கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை, நொச்சிக்குப்பம் பகுதியை ஒட்டியுள்ள லூப் சாலையில் நடைபாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குப்படுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை  அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.  ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மெரினா கடற்கரையில் தற்போதைய நிலையில் 1,962 கடைகள் இயங்கி வரும் நிலையில், அவற்றை ஒழுங்குபடுத்தும் விதமாக 27.04 கோடி செலவில்   7 அடி நீளம் 3 அடி அகலத்திலான ஒரே மாதிரியான 900 கடைகளை  மாநகராட்சியே அமைத்து கொடுத்து ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கலங்கரை விளக்கம் அருகில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் வியாபாரிகளுக்கு ₹66 லட்சம் செலவில் 300 தற்காலிக  மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பின் நிரந்தர மீன் அங்காடி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர் ராஜகோபால் நீதிபதிகளிடம், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நொச்சிக்குப்பம் பகுதியை ஒட்டியுள்ள லூப் சாலையில் நடைபாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி கொடுத்துள்ள விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

 மேலும், மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் அமைத்து கொடுக்கப்படவுள்ள புதிய கடைகளில்  பிளாஸ்டிக் பயன்பாடு கண்டிப்புடன் தவிர்க்கப்பட வேண்டும். அதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கடைகள் வடிவமைப்பு மற்றும் எத்தனை கடைகளுக்கு அனுமதி தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : Lighthouse ,Nochikkuppam Loop Road ,Pattinapakkam ,walkway , Lighthouse, Starvation, High Court, Corporation
× RELATED கரூர் அமராவதி மேம்பாலத்தில் அசுர...