×

39 நாட்கள் பரபரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையின் 39வது நாளான நேற்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் வாதிடும்போது, தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழி இல்லை. மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. ஆலையை சுற்றி 25 மீட்டருக்கு பசுமை போர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை விதியை கூட ஆலை நிர்வாகம் பின்பற்ற தவறி விட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. கடந்த காலத்தில் விதிகளை பின்பற்றாததற்காக ஆலை நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி அபராதம் அதற்கு சான்றாகும்.கடந்த 2018 மே மாதத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுவதாக வேதாந்தா நிர்வாகம் கூறும் அதே வேளையில், ஆலை ஆரம்பித்த 1997ம் ஆண்டிலிருந்து தற்போது வரை அவர்கள் கூறும் கணக்கை அடிப்படையாக வைத்து பார்த்தால் ஆலைக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது தெரியவருகிறது. ரூபாய் 3000 கோடி முதலீடு செய்து ரூ.20,000 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிய பின்னரும் ஆலை மூடியதால் பலத்த நஷ்டம் என்று கூறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு செயல்படுவோம் என்றும் கூடுதல் கட்டுப்பாடு விதித்தாலும் அதை பின்பற்ற தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு தரப்பு, ஆலை நிர்வாகம் தரப்பு, இடையீட்டு மனுதாரர்கள் தரப்பு என அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : Madras High Court ,Sterlite , 39 days, arguments, Sterlite plant, case, adjournment of judgment, Madras High Court
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு