×

நடப்பு நிதியாண்டில் 5% வளர்ச்சி என்பது மிகைப்படுத்தப்பட்டது : ப.சிதம்பரம் தகவல்

புதுடெல்லி, ஜன.9: ‘‘இந்தாண்டு ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்ட உத்தேச மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்டது,’’ என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்த நிதியாண்டுக்கான தேசிய வருவாயின் முன்கூட்டிய மதிப்பீட்டை, தேசிய புள்ளியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், நாட்டின், ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ (ஜிடிபி) 5 சதவீதமாக உயரும் என  மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 2 சதவீதம் குறைவானது. 5 சதவீதம் அளவு கடந்த 11 ஆண்டுகளில் மிக குறைவானது. இந்நிலையில், இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டின் ஜிடிபி உத்தேச வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்பது மிகைப்படுத்தப்பட்டது. இந்த நிதியாண்டின் முதல் பாதியில் வளர்ச்சி வீதம் 4.75 சதவீதமாக இருந்தது. இரண்டாவது பாதியில் வளர்ச்சி 5.25 சதவீதமாக இருக்கும் என்பது நம்பும்படியாக இல்லை. வேளாண்மை, சுரங்கத்துறை, உற்பத்தி மற்றும் கட்டுமானம் ஆகியவை உட்பட முக்கிய துறைகளின் வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். உண்மையில் 3.2 சதவீதத்துக்கு அதிகமாக இருக்காது. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என மத்திய அரசு கூறுவது மிகப் பெரிய பொய். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : growth , 5% growth , current fiscal year , exaggerated
× RELATED தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட...