×

கொரோனாவிலும் குறையவில்லை; திருவில்லியில் அதிகரித்து வரும் விபத்து: கடந்தாண்டு பலி 62, காயம் 129

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் சுமார் 62 பேர் பலியாகியுள்ளனர். அதிகரித்து வரும் வாகனங்கள், போக்குவரத்து நெருக்கடி, வேகமாக வரும் வாகனங்கள், சாலை விதிகள் மீறுதல் போன்ற பல்வேறு காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை விபத்துக்களில் ஏற்படும் சிறு காயங்கள் கூட பல மாதங்களில் மனித வாழ்க்கையை புரட்டி போட்டு விடும். பல்வேறு விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாகவும் வாழ்க்கை நடத்துவது என்பது கூட வழியில்லாமல் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை பல இடங்களில் உள்ளதை காணலாம்.பலரோ விபத்துகளில் தங்கள் உடல் உறுப்புகளை இழந்து செயல்படாத நிலையில் உள்ளனர். எனவே அனைவரும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது வேகமாக செல்லக் கூடாது. தங்கள் குடும்பங்களை எண்ணி பார்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும். அதிவேகமாக வாகனம் ஓட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும். விழிப்புணர்வு பேரணிகளும் நடை பெற்று வருகிறது. எத்தனை விழிப்புணர்வு பேரணிகள் நடத்தினாலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும், ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் என்னவோ அதிகரித்து தான் வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்படுகின்றன. இத்தனைக்கும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சில மாதங்கள் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் திருவில்லிபுத்தூரில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் சில மாதங்கள் ஓடாத நிலையிலும் எஞ்சியுள்ள மாதங்களில் திருவில்லிபுத்தூர் காவல்நிலைய உட்கோட்ட பகுதிகளான அதாவது திருவில்லிபுத்தூர் நகர்,திருவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில், மல்லி, மம்சாபுரம், நத்தம்பட்டி, கூமாபட்டி, வத்திராயிருப்பு, வன்னியம்பட்டி என திருவில்லிபுத்தூர் காவல் நிலைய உட்கோட்ட பகுதியில் ஆகிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இந்த விபத்துக்கள் நடைபெற்றுள்ளது.திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற விபத்துக்களில் ஆண்கள், பெண்கள் உட்பட 129 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்தாண்டு விபத்துக்கள் ஏற்பட்டு 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 62 பேர் இறந்து விட்டனர்.இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் வாகனங்களால், அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை விதிகளை மீறுவது, ஹெல்மெட் அணியாதது, போன்ற சாலை விதிகளை மீறுபவர்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் உடல் உறுப்புகளை இழக்கும் சூழல் உள்ளது.விபத்து குறித்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்வது. சாலை விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, அபராதம் விதிப்பது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனாலும் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாகவும், தங்கள் குடும்பத்தினரை நினைத்து சாலை விதிகளை மதித்து நடந்தால் தான் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்’’ என்றார்….

The post கொரோனாவிலும் குறையவில்லை; திருவில்லியில் அதிகரித்து வரும் விபத்து: கடந்தாண்டு பலி 62, காயம் 129 appeared first on Dinakaran.

Tags : Corona ,Thiruvilli ,Thiruvilliputhur ,Tiruvilliputhur ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...