×

பலாத்காரத்தால் பாதித்த 8 பேர் உட்பட காப்பகத்தில் இருந்து 13 சிறுமிகள் ஓட்டம்

பெர்காம்பூர்: ஒடிசாவில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 8 சிறுமிகள் உட்பட 13 சிறுமிகள் அரசு காப்பகத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். ஒடிசா மாநிலம், கன்ஜம் மாவட்டத்தில் கோசைனுகோனில் உட்கல் பாலாசிரமம் என்ற பெயரில் அரசு காப்பகம் இயங்கி வருகின்றது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் வீடுகளை விட்டு ஓடி வந்த சிறுமிகள் என 50 பேர் காப்பகத்தில் தங்கி இருந்தனர். இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 8 சிறுமிகள் உட்பட 13 சிறுமிகள் திங்களன்று இரவு காப்பகத்தின் சுவரை ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து காப்பக கண்காணிப்பாளர் சஸ்மிதா ராணி பாத்தே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தப்பி சென்றவர்கள் அனைவரும் 12 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். தப்பிச் சென்ற சிறுமிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிறுமி அவரது உறவினரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். சிறுமிகள் தப்பி சென்றதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக காப்பகத்தில் இரு வேறு குழுக்களிடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக கூறப்படுகின்றது. மேலும், கடந்த 4 நாட்களாக காப்பகத்தில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சிறார் பாதுகாப்பு அதிகாரி சுபோத் காந்த் சாரங்கி தெரிவித்துள்ளார்.


Tags : girls ,eight ,shelter home ,Odisha ,Ganjam district , 13 minor girls escape , shelter home ,Odisha's Ganjam district
× RELATED இறைவனுக்கு உகந்த எட்டு மலர்கள்