×

கேரளாவில் இருந்து வால்பாறைக்கு பிளஸ்-2 மாணவியை காரில் கடத்தி குத்திக்கொன்ற காதலன் கைது : மலையில் இருந்து வனப்பகுதிக்குள் வீசிய கொடூரம்

வால்பாறை: கேரளாவில் இருந்து பள்ளி மாணவியை காரில் வால்பாறைக்கு  கடத்தி குத்திக்கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் நெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சபீர் (26). அங்குள்ள கார் ஷோ ரூமில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரும் எர்ணாகுளம், கல்லூரைச் சேர்ந்தவர் ஈவா(17) என்பவரும் கடந்த இரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். பிளஸ்-2 படித்து வந்த ஈவா திடீரென மாயமானார். அவரை தேடியபோது சபீர் நேற்று முன்தினம் ஷோ ரூமிற்கு சர்வீசுக்கு வந்த காரில் ஈவாயை கடத்தி சென்றது தெரியவந்தது. சபீர் காருடன் மாயமானதை தொடர்ந்து ஷோ ரூம் நிர்வாகத்தினர் எர்ணாகுளம் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து காரின் பதிவு எண்ணை வைத்து தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது கார் கோவை மாவட்டம் வால்பாறையை நோக்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, கேரள போலீசார் வால்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் வால்பாறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வாட்டர்பால்ஸ் அருகே சபீர் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் சபீர் மட்டும் இருந்தார். காரின் முன் சீட்டில் ரத்தக்கறை இருந்தது. இதனால் சபீரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஈவாவை பள்ளி முடிந்தவுடன் காரில் வால்பாறைக்கு கடத்தி வந்தேன். வரும் வழியில் இடையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் கேரள மாநிலம் மளுக்கப்பாறை பகுதியில் ஈவாயை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, வரும் வழியில் மறைவான இடத்தில், மலையில் இருந்து உருட்டி விட்டேன் என்று போலீசாரிடம் கூறினார். இதையடுத்து அந்த இடத்துக்கு போலீசார் சபீரை அழைத்து சென்றனர். அங்கு ஈவாவின் உடலை உருட்டிவிட்ட இடத்தை சபீர் காண்பித்தார். ஆனால், விடிய விடிய தேடியும் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை பழைய வால்பாறை மற்றும் வறட்டுப்பாறை எஸ்டேட்டிற்கு இடைபட்ட வனப்பகுதியில் ஈவாவின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சடலத்தை மீட்ட வால்பாறை போலீசார் இது பற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து எர்ணாகுளம் போலீசார் வால்பாறைக்கு வந்தனர். அவர்களிடம் ஈவாவின் சடலமும், சபீரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் சபீரை கைது செய்து அழைத்து சென்றனர்.

கொலைக்கான காரணம்: ஈவாவும் சபீரும் காதலித்தனர். இந்த நிலையில் பள்ளி படிப்பு முடிந்ததும் தான் வெளிநாட்டுக்கு சென்று படிக்க உள்ளதாக சபீரிடம் ஈவா தெரிவித்தார். இது சபீருக்கு பிடிக்கவில்லை. மேலும் கடந்த சில மாதமாக சபீரை ஈவா புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது.  
எனவே காதலி நமக்கு கிடைக்காமல் போவாளோ? என்ற பயம் சபீருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் ஈவாவை வால்பாறைக்கு சபீர் காரில் கடத்தி வந்துள்ளார். வரும் வழியில் தன்னை புறக்கணிப்பது குறித்தும், வெளிநாட்டுக்கு செல்வது குறித்தும் சபீர் கேட்டதாகவும், அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் ஈவாவை சபீர் குத்திக்கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

Tags : lover ,student ,Kerala ,death , Boyfriend kidnapped, stabbed to death , Kerala
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...