×

பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சில் குறுக்கீடு உதயகுமார் - துரைமுருகன் காரசார மோதல்

சென்னை: மு.க.ஸ்டாலின் பேச்சில் குறுக்கீடு செய்த அமைச்சர் உதயகுமாருக்கும், துரைமுருகனுக்கும் இடையே காரசார மோதல் நடந்தது.
சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுவாக கவர்னர் உரையில் அரசின் கொள்கையோ, கோட்பாடுகளோ பற்றி சொல்லவில்லை. காஞ்சிபுரம் அத்திரவரதர் திருவிழா, மாமல்லபுரம் தலைவர்கள் சந்திப்பு, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என பல்வேறு உதவி திட்டங்கள் பலவற்றை வரிசைப்படுத்தி ரயில்வே கைடு போல் தயாரிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை பற்றி அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இந்த உரையில் சொல்லப்படவில்லை. சபாநாயகர் தனபால் : குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி நிறைய பேசி விட்டோம். எனவே, வேறு விஷயங்கள் பேசுங்கள். அமைச்சர் உதயகுமார் : இந்தியா பற்றி எதிர்க்கட்சி தலைவர் கூறுகிறார். தமிழகத்தை பற்றி மட்டும் பேச வேண்டும்.

மு.க.ஸ்டாலின்: குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் மக்களவையில் பாஜவுக்கு பெரும்பான்மை இருந்ததால் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் அதிமுக வாக்களித்ததால்தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சர் உதயகுமார்: மாநிலங்களவையில் நாங்கள் வாக்களித்ததால் நிறைவேறியது போன்று தவறான பிரசாரம் செய்யக்கூடாது. சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதால் உங்களது பேரணியும் அமைதியான முறையில் நடந்தது. நாங்கள் வராது என்று சொல்கிறோம். இல்லை வரும் என்று சென்னால் என்ன அர்த்தம். தொடர்ந்து, அவர் பேசிக்கொண்டிருந்த போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதை, கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து அமைச்சர் உதயகுமார்: குடியுரிமை திருத்த சட்டம் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களை பாதிக்காது. அப்படியிருக்கையில் மீண்டும், மீண்டும் அதை பற்றி பேசுவது சரியில்லை. எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: எதிர்க்கட்சிகள் பேசும் போது அமைச்சர் குறுக்கிட்டு பேசுவது தவறில்லை. எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது அமைச்சர் தட்டி கொடுக்க வேண்டும். எல்லா அமைச்சர்களும் அப்படி தான் பேசுகிறார்கள். முதல்வர் கூட அப்படி தான் பேசுகிறார். ஆனால், அமைச்சர் உதயகுமார் மட்டும் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசுகிறார். இனிமேல் அவர் பேசும் போது நாங்கள் அத்தனை பேரும் எதிர்ப்பு குரல் கொடுப்போம்.

முதல்வர் எடப்பாடி : மூத்த உறுப்பினர் பேசுவது வருத்தம் அளிக்கிறது. அமைச்சர்கள் பேசும் போது, நீங்கள் அனைவரும் குறுக்கீடு பேசுவீர்கள் என்றால், நீங்கள் பேசும் போது நாங்களும் குறுக்கீட்டு பேசினால், இந்த அவையை நடத்த முடியாது. எதிர்க்கட்சி தலைவர் எப்படி பேச வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட முடியாது. எங்களை அதிகாரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. யாருக்கும் அஞ்சும் அரசு அல்ல’
முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூச்சலிட்டனர். பதிலுக்கு திமுக உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். அப்போது அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் தனபால்: அனைவரும் உட்காருங்கள். முதல்வரை பேசவிடாமல் தடுப்பது சரியல்ல. தொடர்ந்து அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர். முதல்வர் எடப்பாடி : எதிர்க்கட்சி துணை தலைவரை நான் மதிக்கிறேன். அமைச்சர் பேசும் போது எதிர்ப்பு குரல் கொடுத்தால் கொடுப்போம் என்று கூறுவது முறையல்ல. அவர் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று பேசினார். இருப்பினும், அவையில் கூச்சல் குழப்பம் தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்தது.

சபாநாயகர் தனபால்: அனைவரும் உட்காருங்கள்.  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேச வேண்டாம். முதல்வர் எடப்பாடி : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வன்முறை நடந்தது. துப்பாக்கிச்சூடு நடந்தது என்று எதிர்க்கட்சி தலைவர் கூறுகிறார். அதற்கு அமைச்சர் பதில் அளிக்கிறார். நாங்கள் தமிழகத்தில்தான் ஆட்சி செய்கிறோம். இங்கு எந்த பிரச்னையும் வராது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். ஆழமாக பேச வேண்டாம் என்று சபாநாயகர் கூறியுள்ளார். மற்றவர்கள் வழிகாட்டியாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்க வேண்டும். அமைச்சர் பேசினால் நீங்கள் விளக்கம் தர வேண்டும். துரைமுருகன்: முதல்வர் கருத்துக்கு மாறுபடவில்லை. அமைச்சர் விளக்கம் சொல்ல உரிமை உண்டு. முதல்வர் கூட ஷார்ட்டா பதில் சொல்கிறார். அமைச்சர் உதயகுமார் நீண்ட நேரம் கருத்து சொல்கிறார். அவருக்கு விளக்கம் அளிக்க உரிமை உண்டு. முதல்வர் கோபித்துக்கொள்ள தேவையில்லை என்று பேசி விவாதத்தை முடித்து வைத்தார்.


Tags : clash ,Udayakumar - Duraimurugan ,council ,speech ,MK Stalin ,Duraimurugan Clash ,Council Udayakumar , MK Stalin's speech , council Udayakumar - Duraimurugan clash
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்