×

வாக்கு எண்ணிக்கை சிசிடிவி காட்சி தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட தேர்தல் ஆணைய மனு தள்ளுபடி

மதுரை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை, தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம் கேட்ட மாநில தேர்தல் ஆணையத்தின் மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை ஏற்கனவே, தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் கிளை, தனது எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் நடந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஜனவரி 3ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவாளரிடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, சிசிடிவி காட்சிப்பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம் கேட்டு, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் தரப்பில் ஒரு மனு செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், ‘‘ 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமரா பதிவுகளை பதிவிறக்கம் செய்து ஹார்ட் டிஸ்கில் சேமித்து, அதன்பிறகு நகல் எடுக்க வேண்டியுள்ளது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘எதற்காக இப்படி கூறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தான் தெரியும். நீதிமன்ற உத்தரவை சுலபமாக எடுத்துக் கொள்கிறீர்கள். 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்றபோது, 8ம் தேதியாகியும் ஏன் தாக்கல் செய்யவில்லை. உங்களுக்கு போதுமான அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் தாமதிக்கிறீர்கள். உங்கள் தரப்பு வாதம் ஏற்புடையதல்ல. எனவே, கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.


Tags : EC ,CCTV , EC dismissed , petition , file, CCTV footage
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...