×

அண்ணா பல்கலை. பெயரை மாற்றக்கூடாது: ஆசிரியர்கள் கூட்டமைப்பு கவர்னருக்கு கடிதம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற அனுமதிக்கக்கூடாது என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தமிழக கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழக வேந்தரும் தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:1978ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்பம் சார் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அன்ட் பிளானிங், அழகப்பா காலேஜ் அப் டெக்னாலஜி, மெட்ராஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, குரோம்பேட்டை ஆகிய 4 கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளும், 13 உறுப்பு கல்லூரிகள், 3 பல்கலைக்கழக வளாகங்கள், 593 இணைவு பெற்ற கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.  

பல்கலைக்கழகத்துக்கு தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்து வழங்கியுள்ளது. இதற்காக ஆராய்ச்சி பல்கலைக்கழகம், இணைவு அனுமதி வழங்கும் பல்கலைக்கழகம் என பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் அப்படியே வைத்துக்கப்படுமா அல்லது இணைவு அதிகாரம் வழங்கும் பல்கலைக்கழகத்துக்கு வேறு பெயர் வைக்கப்படுமா என்ற பிரச்னை எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது. அண்ணா பல்கலைக்கழகம்(இன்டிட்யூட் ஆப் எமினென்ஸ்) என்று ஆராய்ச்சி பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். இணைவு அனுமதி வழங்கும் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு இன்ஜினியரிங் பல்கலைக்கழகம் என்று பெயர் வைக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெரை மாற்றுவது பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். இதுவரை பிரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இருந்த பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படவில்லை. அதே போல் ஐதராபாத் பல்கலைக்கழகம் உள்பட இன்ஸ்ட்டியூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள எந்த பல்கலைக்கழகத்தின் பெயரும் மாற்றப்படவில்லை. அதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா பல்கலைக்கழகம் (இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ்) என்று தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர் கூட்டமைப்பினர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Tags : governor ,Anna University ,Teachers Federation , Anna Univ., Name, Can't Change, Teachers Federation, Governor, Letter
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...