×

மேகதாது, தென்பெண்ணையாறு விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம்: மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் விளக்கம்

சென்னை: மேகதாது, தென்பெண்ணையாறு விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் சட்டப்போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் நலனை உறுதியோடு பாதுகாப்போம். அதற்கு இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என கூறியுள்ளீர்கள். அதேபோல் தென்பெண்ணையாறு விவகாரம் குறித்து தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியிருக்கிறது. நதிநீர்ப் பிரச்னைகளுக்கு சட்டப்போராட்டம் நடத்தி வருவதாகக் கூறும் இந்த அரசு, மேகதாது, தென்பெண்ணையாறு விவகாரத்தில் உரிய காரணங்களைக் கூறி ஏன் இன்னும் தடை உத்தரவைப் பெறும் முயற்சியில் ஈடுபடவில்லை.

முதல்வர் எடப்பாடி: தென்பெண்ணை ஆறு குறித்த மூல வழக்கு ஏற்கனவே இருக்கிறது. அப்படி மூல வழக்கு இருக்கும்பொழுதே அவர்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள், நாமும் வாதாடிக் கொண்டிருந்தோம், இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளோம். மேகதாது அணையையும் கட்டக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். மேகதாது அணை கட்டினால் தமிழகம் வறண்டு போய்விடும். அதை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். எந்த வகையிலும் மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கக்கூடாது, நாம் இடைக்கால மனு அளித்திருக்கிறோம், மூல வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே, உங்களுடைய நோக்கமும், எங்களுடைய நோக்கமும் ஒன்றாக இருக்கிறது. மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலே நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலமாக சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : battle ,CM ,MK Stalin ,Megadadu ,South ,MG Stalin , Megadadu, coconut tree, affair, legal battle, MK Stalin question, CM description
× RELATED வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு!