×

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது ஆளுங்கட்சியா, எதிர்க்கட்சியா? முதல்வர்- காங்கிரஸ் எம்எல்ஏ விவாதம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது ஆளுங்கட்சியா? எதிர்கட்சியா? என்பது குறித்து சட்டப் பேரவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் காரைக்குடி உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி(காங்கிரஸ்) பேசியதாவது: 3 ஆண்டுகளுக்கு பிறகு ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. யார்? யார்? எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளனர். எதிர்கட்சியா? ஆளுங்கட்சியா? முதல்வர் எடப்பாடி:  அண்மையில் தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் அதிகமான வாக்குகளை உங்கள் கூட்டணி பெற்று அதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அது இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: வாக்கு வித்தியாசத்தைப் பற்றிச் சொன்னார்கள். நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஒட்டு மொத்தத் தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தல். உள்ளாட்சித் தேர்தல் என்பது 27 மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது. இன்னும் 9 மாவட்டங்களில் நடைபெற வேண்டி இருக்கிறது. ஊரகப் பகுதியில் மட்டும் தான் தற்போது தேர்தல் நடைபெற்றிருக்கிறது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் இருக்கிறது. அதை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, நாங்கள் பாஸ் அல்ல டிஸ்டிங்ஷன் வாங்கக்கூடிய அளவுக்கு வெற்றி பெற்றுள்ளோம்.

முதல்வர் எடப்பாடி: அப்படித்தான் கனவு கண்டு கொண்டிருந்தீர்கள். ஆனால் உள்ளாட்சி மன்றத் தேர்தலிலே மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டார்கள். கே.ஆர்.ராமசாமி: உள்ளாட்சி தேர்தலில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. குறைந்த அளவிலான வாக்குகளை எண்ணி முடிவுகள் அறிவிக்க பல இடங்களில் தாமதம் ஏற்பட்டது ஏன்?. அமைச்சர் வேலுமணி: நீங்கள் சொன்ன குற்றச்சாட்டு சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே நடந்தது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அதை பற்றி இங்கு விவாதிக்க முடியாது. கே.ஆர்.ராமசாமி: இது போன்ற முறைகேடுகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவது எனது கடமை. முதல்வர் எடப்பாடி: இந்த தேர்தல் நியாயமா தர்மத்தின் அடிப்படையில் நடந்துள்ளது. யார் தலையீடும் கிடையாது. 450 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த அளவுக்கு நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் சுட்டி காட்டலாம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags : government ,Congress ,CM , Local Elections, Success, Governance, Opposition ?, CM - Congress MLA, Debate
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...