×

ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்

* 80 வீரர்கள் பலி?; போர் மூளும் அபாயம்
* இந்தியா உட்பட உலக நாடுகள் அதிர்ச்சி

வாஷிங்டன்: ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழியாக, அந்நாட்டு ராணுவம் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க வீரர்கள் 80 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறி உள்ளது. ஆனால், இதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் உச்சகட்ட அபாயம் ஏற்பட்டுள்ளதால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் குத்ஸ் பிரிவு தளபதி காஸ்சிம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க படை நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், ஈரானுக்கு கடும் ஆத்திரமூட்டி உள்ளது. அமெரிக்காவை பழி வாங்கியே தீருவோம் என அந்நாட்டின் உச்ச தலைவர் காமேனெய் மிரட்டல் விடுத்திருந்தார். அதே சமயம், ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் உடனடியாக வெளியேற வேண்டுமென அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனால், அமெரிக்க ராணுவம் வெளியேறவில்லை.

சுலைமானி மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு நேற்று முன்தினம் அவரது உடல் ஈரானில் அடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக ஈரான் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நேற்று அதிகாலை அந்நாட்டு ராணுவம் ஈராக்கின் இர்பில், அல் அஸ்சாத் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இரு தளங்களிலும் 22 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இதில் 80 அமெரிக்க வீரர்கள் பலியாகி விட்டதாகவும் ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

புரட்சிகர பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஈரான் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ‘ஈரான் ராணுவம் அதிகாலை 1.30 மணி அளவில் அமெரிக்க வீரர்கள் மீது 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் எந்தவொரு ஏவுகணையும் இடைமறிக்கப்படவில்லை. அமெரிக்க ராணுவ தீவிரவாதிகள் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ தளத்தில் இருந்த ஹெலிகாப்டர், ஆயுதங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஈரான் தரப்பில் யாருக்கும் சிறு காயமும் ஏற்படவில்லை,’ என கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது தொடர்பாக ஈரான் அரசு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த தாக்குதல் சுலைமானி மரணத்திற்கு பழிக்கு பழியாக நடத்தப்பட்டது. ஈரான் போரை விரும்பவில்லை. இந்த தாக்குதல் எங்களை தற்காத்துக் கொள்ள நடத்தப்பட்டதாகும்,’’ என்றனர். ஏற்கனவே, பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது போர் மூளும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

இத்தாக்குதலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனும் உறுதி செய்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் ஹோப்மன் கூறுகையில், ‘‘ஈராக் ராணுவ தள நிலவரம் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் தகவல் தரப்பட்டுள்ளது. முதற்கட்ட சேத மதிப்பீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த சில நாட்களாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 2 ராணுவ தளத்திலும் வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகளையும், கூட்டு படை வீரர்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் எடுக்கப்படும்,’’ என்றார். இதற்கிடையே, அதிபர் டிரம்ப் பல்வேறு உலக நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலமாக பேசி வருகிறார். ஏற்கனவே, பிரதமர் மோடியுடன் அவர் பேசிய நிலையில், கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல்-தானி மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் தொலைபேசியில் ஈரான் விவகாரம் தொடர்பாக பேசினார். இது தவிர, மேலும் பல நட்பு நாடுகளின் ஆதரவையும் அமெரிக்கா திரட்டி வருகிறது.

இதன் காரணமாக, அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் உச்சகட்ட அபாயம் நிலவி வருவது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கவலை அடையச் செய்துள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ‘ஈரான் ஏதாவது செய்தால், அதற்கான விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும்,’ என எச்சரித்திருந்தார். அதையும் மீறி ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. எனவே, அமெரிக்கா இரவோடு இரவாகவோ அல்லது இன்று அதிகாலையிலேயோ கூட பதில் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், உலகம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

* ஈராக்குக்கு முன்கூட்டியே தகவல்
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக ஈரான் முன்கூட்டியே தகவல் தந்துள்ளது. இது குறித்து ஈராக் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான் அரசிடமிருந்து அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், சுலைமானி படுகொலைக்கு பதிலடியாக உடனடி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளம் உள்ள பகுதியில் மட்டும் நடத்தப்படும் என ஈரான் கூறியுள்ளது,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

* பங்கு சந்தை கடும் வீழ்ச்சி
ஈரான் நடத்திய தாக்குதலால் உலக அளவில் நேற்று பங்கு சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. அதேபோல், அமெரிக்க டாலரின் மதிப்பும் சரிந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 3 டாலர்கள் அதிகரித்தது. அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் நிலை வந்தால், கச்சா எண்ணெய் விலை மேலும் கடுமையாக அதிகரிக்கும்.

* மீண்டும் நிலநடுக்கம்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பஷீர் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 புள்ளியாக பதிவானதாக அமெரிக்க வானியை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இரு நிலநடுக்கத்திலும் எந்த உயிரிழப்பும் பாதிப்புகளும் இல்லை என ஈரான் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* ஈரான் வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கு எச்சரிக்கை
ஈரானில் உக்ரைன் நாட்டு விமானம் விபத்துக்குள்ளாகி நடுவானில் வெடித்து சிதறியதில் 176 பயணிகள் பலியாகினார். இது விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்ற சந்தேகம் இருந்து வரும் நிலையில், ஈரான் வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான், ஈராக், ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா வான்வெளியில் பறக்கும் விமானங்கள் மிகுந்த விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமென அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேபோல், ஈரான், ஈராக் மற்றும் அரபு நாட்டு வான்வெளியில் தங்கள் நாட்டு விமானங்கள் பறக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.

யாரும் பலியாகவில்லை அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை தாக்குதலில், அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், ‘‘யாரும் பலியாகவில்லை’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று நாட்டு மக்களுக்கு டி.வி.யில் ஆற்றிய உரையில் கூறியதாவது: ஈரான் நேற்று முன்தினம் இரவு நடத்திய ஏவுகணை தாக்குதலில், அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை. நமது வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஈராக்கில் உள்ள நமது ராணுவ தளத்தில் மட்டும் லேசான சேதம் ஏற்பட்டது. ஈரான் ராணுவ தளபதியாக இருந்த சுலைமானி, அமெரிக்க இலக்குகளை தாக்க திட்டம் தீட்டினார். நாம் தடுத்து நிறுத்திவிட்டோம்.  

எதையும் சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக இருக்கிறது. ஆனால், ஈரான் சற்று பின்வாங்குவது போல் தெரிகிறது. இது அனைத்து தரப்பினருக்கும், உலகத்துக்கும் நல்லது. நான் அதிபராக  இருக்கும் வரை  ஈரான் அணுஆயுதம்  தயாரிக்க அனுமதிக்கமாட்டேன். எரிசக்தியில் அமெரிக்கா தன்னிறைவு பெற்றுள்ளது. கச்சா எண்ணெய் மற்றம் இயற்கை எரிவாயு உற்பத்தியில் நாம் முதல் இடத்தில் உள்ளோம். நமக்கு மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் தேவையில்லை. ஈரானுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என நாம் விரும்புகிறோம். அமைதியை பின்பற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Iran ,Iraq ,US ,military bases , Iraq, US, military bases, volley, missile, attack
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...