×

திருப்பதி அருகே அதிகாலை பயங்கரம் பஸ்கள் நேருக்குநேர் மோதல்; டிரைவர், கிளீனர் பலி: ஐயப்ப பக்தர்கள் உள்பட 50பேர் படுகாயம்

திருமலை:   தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தனி பஸ்சில் சென்றனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்றிரவு மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு பஸ்சில் வந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த காசிபண்டா அருகே பூதலப்பட்டு-நாயுடுபேட்டை நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த அரசு சொகுசு பஸ்சும், பக்தர்கள் சென்ற பஸ்சும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பஸ்களின் முன்பகுதியும் நொறுங்கியது. 2 பஸ்களில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். சொகுசு பஸ் டிரைவரான பெனுமலூரை சேர்ந்த ரமேஷ், மற்றும் கிளீனர் கிருஷ்ணா மாவட்டம் உய்யூறு கிராமத்தை சேர்ந்த பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சந்திரகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்ததால் கேஸ் கட்டர் மூலம் இரும்பு ராடுகளை துண்டித்து காயமடைந்தவர்களை மீட்டனர். படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோரை திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் ரமேஷ், பிரசாத் ஆகியோரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பக்தர்கள் மற்றும் பயணிகளின் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. விபத்துக்குகான காரணம் குறித்து சந்திரகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக பூதலப்பட்டு - நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



Tags : devotees ,Tirupati ,cleaner , Early morning, Tirupati; Driver, cleaner kills,50 injured, irate devotees
× RELATED திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்