×

தாமிரபரணியை பாதுகாக்க வழக்கு பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ்

மதுரை: தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கக் கோரிய வழக்கில் பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, சுமார் 125 கி.மீ தூரத்திற்கு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சென்று புன்னக்காயல் அருகே கடலில் சேருகிறது.
இதன்மூலம் இரு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இரு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும் இது விளங்குகிறது.

தாமிரபரணி ஆற்றின் பல இடங்களில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்கிறது. இதனால், ஆறு மாசடைகிறது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நவீன இயந்திரங்கள் உதவியுடன் சுத்திகரிப்பு செய்து மறு பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். ஆற்றின் பல இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே, தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நவீன இயந்திரம் மூலம் கழிவுநீரை மறுசுழற்சி செய்யவும், ஆற்றுப்பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர், தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 6 வாரம் தள்ளிவைத்தனர்.


Tags : Public Works Department , Notice, Public Works Department, protecting , copper pipe
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...