×

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் ராஜகோபுரத்தின் நிலைத்தன்மை பொறியியல் வல்லுனர்கள் ஆய்வு

தென்காசி: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஒன்பது நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தின் நிலைத்தன்மை குறித்து ஐஐடி மற்றும் பொறியியல் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் பதினாறாம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாகும். பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோயில் இடைப்பட்ட காலத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு மொட்டை கோபுரமாக காட்சியளித்தது. பின்னர் 1990ல் ஒன்பது நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து 2006ல் சில திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை ஐஐடி பேராசிரியர் சுதர்சன் தலைமையிலான குழுவினரும் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி ஸ்ட்ரக்சுரல் பிரிவு தலைமை பேராசிரியர் சித்தார்த்தன் தலைமையிலான குழுவினரும் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் அமைந்துள்ள நிலப்பரப்பில் மண்ணின் தன்மை குறித்த பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கும் பணியும் நடந்தது.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் கூறுகையில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் 2018 மே மாதம் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது ஆய்வறிக்கையில் கோயிலின் கட்டிட அமைப்பில் சில மாற்றங்கள் குறித்து குறிப்பிட்டிருந்தனர். கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அப்போது கோயில், ராஜகோபுரத்தில் பல திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதற்கு ராஜகோபுரம் ஏற்றதாக உள்ளதா என்பதை ஆராய்ந்து தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிக்கையை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு மண்ணின் தன்மை குறித்து தரையில் துளையிட்டு மாதிரி சேகரித்தனர். ராஜகோபுரத்தின் அஸ்திவாரத்தில் சில பகுதிகளில் கீறல்கள் இருந்தது. இந்த கீறல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கக் கூடியவையா என்பதை சோதிக்கும் வகையில் கீறல் உள்ள பகுதியில் கண்ணாடியை ஒட்டி சோதித்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு கண்ணாடியில் எந்தவித மாற்றமும் இல்லையெனில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பதாகும். கீறல் ஏற்பட்டிருந்தால் ராஜகோபுரத்தில் உள்ள கீறல் விரிவடைகிறது என்று அர்த்தம். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

Tags : Sustainability Engineering Exploration Study of Tenkasi Kasiviswanathan Temple Rajagopuram ,Tenkasi Kasiviswanathan Temple Rajagopuram of Sustainability Engineering Exploration Study , Sustainability Engineering, Study ,Tenkasi Kasiviswanathan Temple,Rajagopuram
× RELATED ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் காசி, கயா...