×

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்கு எண்ணிக்கை: போலீசார் குவிப்பு

புவனகிரி: கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கை பிடிஓ மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பல முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சி.சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருள்பிரகாசம் என்பவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக்கூறி கடந்த 2ம்தேதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கையை இன்று நடத்தி முடிவுகளை அறிவிக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டிருந்தார்.

  இதையடுத்து சிதம்பரம் சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலகிருஷ்ணன் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இதில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடக்கிறது. இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு 1771 வாக்குகள் பதிவாகி உள்ளது.வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



Tags : office ,Girappalayam Union ,Girappalayam Union Office , Reinforcements , heavy security,Girappalayam Union office, Police concentrate
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...