×

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அறுவடைக்கு தயாரான மஞ்சள் செடிகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமக்குடி: பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பரமக்குடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் தினத்தன்று மாவிலை தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, மஞ்சள் கொத்துகள் கட்டிய பானையில், புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பரமக்குடி அருகே வைகை ஆற்றின் வடகரையில் உள்ளது மஞ்சள்பட்டினம். இங்குள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் கொத்துக்கள் சாகுபடி செய்வது வழக்கம். மஞ்சள்பட்டினம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். ஆறு மாத பயிரான மஞ்சள் பயிர் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை நன்றாக கைகொடுத்த நிலையில் நன்கு வளர்ந்து, பூமிக்கு கீழ் கிழங்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் தினத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு, அறுவடை செய்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தாண்டு மஞ்சள் பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : plants ,Pongal: Farmers delight ,festival , Yellow plants , harvest,farmers' delight,Pongal festival,approaches
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...