மாவட்டத்தில் பனியால் பசுந்தேயிலை வரத்து குறைந்தது: தொழிற்சாலைகளில் உற்பத்தி சரிவு

மஞ்சூர்: பனி தாக்குதலால் பசுந்தேயிலை உற்பத்தி குறைந்ததை தொடர்ந்து தொழிற்சாலைகளில் தேயிலைதுாள் உற்பத்தியும் சரிந்தது. நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்களுக்கு சொந்தமான  தொழிற்சாலைகளும் உள்ளன. இந்நிலையில், கடந்த ஆகஸ்டில் துவங்கி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக குந்தா பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்தது.

இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு உரமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்கள். இதனால் தேயிலை மகசூல் பெருமளவு அதிகரித்தது. கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தினசரி  40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து காணப்பட்டது. தினசரி உற்பத்தி திறனுக்கும் மேலாக பசுந்தேயிலை வரத்து பலமடங்கு உயர்ந்ததால் தொழிற்சாலைகள் திணறின. மஞ்சூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான கூட்டுறவு, தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கொள்முதலில் ‘கோட்டா’ முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் பனி விழத்துவங்கியது.

ஆரம்பம் முதலே பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும், பகல் நேரங்களில் பெரும்பாலும் பனி மூட்டமான காலநிலை காணப்படுகிறது. இதனால் பசுந்தேயிலை மகசூல் பாதித்துள்ளது. பனியின் தாக்கத்தால் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் கொப்புளநோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. பசுந்தேயிலை வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. பசுந் தேயிலை வரத்து குறைந்ததால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைதுாள் உற்பத்தியும் சரிந்துள்ளது.

Related Stories:

>