×

தண்ணீர் பெருகி கிடக்கும் நீர்நிலைகளில் தொடரும் உயிர் பலி சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் ஊரணி, கண்மாய் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி கிடப்பதால் குளிக்க செல்வோர் சிக்கி பலியாவது தொடர்ந்து வருகிறது. எனவே அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் கண்மாய்கள் புனரமைப்பு மற்றும் மதகுகள் புதுப்பித்தல், தேவையான இடங்களில் புதியதாக மதகு அமைத்தல் பணிகள் நடந்தது. ரூ.13.97 கோடி மதிப்பீட்டில் வைகை பரமக்குடி வடிநில கோட்டத்தின் கீழ் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டங்களில் 41 கண்மாய்களை சீரமைக்க ரூ.23.62 கோடியும், மதுரை குண்டாறு வடிநில கோட்டத்தின் கீழ் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி வட்டங்களில் 28 கண்மாய்கள் சீரமைக்கப்பட்டது.

11 ஊராட்சி ஒன்றியங்களிலும், யூனியன் பொதுநிதியிலிருந்து பஞ்சாயத்து ஊரணி, கண்மாய் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு, மாவட்டத்தின் பிரதான மழையாக கருதப்படும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. கடந்தாண்டுகளில் தொடர் வறட்சியால் குடிநீருக்கு பரிதவித்த கிராம மக்கள், தற்போது பெய்த மழைக்கு தன்னார்வத்துடன் ஊரணி, கண்மாயிகளில் மழைநீரை சேமித்தனர். இதனால் கிராமங்களில் உள்ள பெரும்பாலான ஊரணி, கண்மாய்கள் முழுமையாக நிறைந்து காணப்படுகிறது. ஊரணி தண்ணீரை கிராம மக்கள் குளிப்பதற்கு, துணிகளை சலவை செய்வதற்கு, கால்கடைகளுக்கு தண்ணீர் காட்டுதல் போன்றவற்றிக்கு பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஊரணியில் குளித்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் மூழ்கி இறப்பதும் தொடர்ந்து வருகிறது. இதனால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த மாதங்களில் சாயல்குடி அருகே உள்ள மேலக்கிடாரத்தை சேர்ந்த உதயகமலேஷ் என்ற பள்ளி மாணவன், கடுகுசந்தை கிராமத்தைச்சேர்ந்த குருபாலன்(16) என்ற மாணவன், பரமக்குடி அருகே பெருமாள்கோயில் கிராமத்தில் தேசிகா(5), காவியா(8) என்ற இரு மாணவிகள், ராமநாதபுரத்தில் ஒருவரும் ஊரணியில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்நிலையில் ஜன. 5ந்தேதி இரவு சிக்கல் பாண்டியன் ஊரணியில் ராமசாமி(65) என்ற முதியவர் உயிரிழந்தார். இது போன்று கால்நடைகளும் தண்ணீர் குடிக்க செல்லும்போது தவறி விழுந்து, சகதியில் மாட்டி இறப்பதும் தொடர்கிறது. எனவே பலிகளை தடுக்க ஊரணிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கவேண்டும். பஞ்சாயத்துகள் சார்பில் அபாயம் குறித்த முன் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fatalities ,village residents , Waterproof, life-threatening
× RELATED பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது...