×

திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலையில் விதிகளை மீறி இயங்கும் நீச்சல் குளங்கள், சாகச விளையாட்டு பூங்காக்கள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் அனுமதியின்றி இயங்கும் நீச்சல் குளங்கள், சாகச விளையாட்டு பூங்காக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலாத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டு முழுவதும் சம சீதோஷ்ண நிலை காணப்படுவதாலும், சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் உள்ளதாலும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஏலகிரியின் இயற்கை எழிலை ரசித்து செல்கின்றனர். மேலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து, இங்குள்ள சொகுசு ஓட்டல்கள் மற்றும் பல்வேறு விடுதிகளில் தங்கி செல்கின்றனர்.

இவர்களுக்காக ஏலகிரி மலையில் 80க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த ஓட்டல்கள், விடுதிகளில் 1800 பேர் வரை தங்கலாம். இங்குள்ள 10க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் நீச்சல் குளங்களும் உள்ளன. இந்த நீச்சல் குளங்கள் ஒரு சில ஓட்டல்களில் உரிமம் பெறாமலும், அரசு விதியின்படி கட்டப்படாமல் அதிக ஆழம் கொண்டவையாக உள்ளன. இதனால்  சுற்றுலா பயணிகள், குழந்தைகள் நீச்சல் குளங்களில் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அத்தனாவூரில் உள்ள சாகச விளையாட்டு பூங்கா ஒன்றில் ரோஷன் என்ற 6 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏலகிரி மலையில் அனுமதியின்றி கொட்டையூர், அத்தனாவூர், மங்கலம், பள்ளகணியூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாகச விளையாட்டு பூங்காக்கள் இயங்கி வருகின்றன.

இப்பூங்காக்களில் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணத்தை வசூலித்துக் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சாகச பூங்காக்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் அரசின் விதிப்படி 4 அடி அளவில்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில ஓட்டல்களில் 12 அடிக்கும் மேல் ஆழமான நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் அரசு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்கள் ஆகும். எனவே கலெக்டர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மக்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கும் நீச்சல் குளங்களை கண்காணித்து அந்த விடுதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சீல் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் கூறியதாவது: ஏலகிரி மலையில் அதிகளவில் சொகுசு விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் யாரும் முறையாக அரசிடம் அனுமதி வாங்காமல் நீச்சல் குளங்கள் கட்டியுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். குறிப்பாக நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்றாலும், சாகச பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்றாலும், முதலில் தாசில்தாரிடம் அனுமதி பெற்று, அதன்பிறகு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரிடர் மேலாண்மை, தீயணைப்புத்துறை, விளையாட்டு ஆணையத்திடம் பயிற்சி பெற்ற நீச்சல் பயிற்சியாளர் மூலம்தான் அந்த நீச்சல் குளத்தை அமைக்க வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் இதுவரை ஏலகிரி மலையில் யாரும் அதை பின்பற்றியதாக தெரியவில்லை.

மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் குளத்தில் நீச்சலுக்கு அனுமதிக்கும் போது அவர்களுக்கு உண்டான தற்காப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களையும் கொடுத்து தான் நீச்சல் குளத்தில் அனுமதிக்க  வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை கையாளாமல் விட்டதால்தான் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய ஊரக வளர்ச்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாதம்தோறும் ஆய்வு மேற்கொண்டு கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் கலெக்டர் மூலம் அந்த விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம். அதன்படி கலெக்டர் தீவிர ஆய்வு மேற்கொண்டு சாகச விளையாட்டுப் பூங்கா மற்றும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாகச பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் ரோஷன் என்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான். இந்த இழப்பு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிமம் இல்லாமலும், அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு சாகசங்களை ஆய்வு செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் மற்றும் விடுதிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு சார்பில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும்
ஏலகிரி மலையில் அனுமதியின்றி பல இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. ஆனால் அரசு விளையாட்டுத்துறை சார்பில் நீச்சல் குளம் இங்கு அமைக்கப்படவில்லை. அனைத்து விதிகளின் கீழ் அரசின் சார்பில் ஏலகிரி மலையில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எந்த விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இல்லை. ஆகையால் அரசு சார்ந்த சாகச விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Tags : District ,administration ,adventure parks ,hill ,Tirupattur ,swimming pools ,Yelagiri , Thirupattur, Swimming Pools, Adventure Sports Parks
× RELATED சித்திரை திருவிழாவிற்கு தனிநபர்...