×

சுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பு: விலை சரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. இதனால் வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது. இங்குள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற  இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்  இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில்,  இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.  ஆனால் கடந்த 2017ம்  ஆண்டு துவக்க முதல் 2018ம் ஆண்டு மே மாதம் வரை, போதிய மழையின்றி  வறட்சி ஏற்பட்டதால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் இளநீர்  உற்பத்தி மிகவும் குறைந்தது. இதனால், வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.

இதனால் இளநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு இளநீர், தோட்டத்தில் ரூ.24வரை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு கோடை மழைக்கு பிறகு ஜூலை இறுதி முதல் தொடர்ந்து பல மாதமாக மழை பெய்துள்ளது. இதனால் தென்னை விவசாயம் செழித்தோங்க ஆரம்பித்தது. மேலும், தென்னையில் இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன்காரணமாக கடந்த இரண்டு மாதத்திலிருந்து இளநீர் விலை சரிய துவங்கியது. கடந்த சில வாரமாக போதிய மழையில்லாமல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியதால் பச்சை ரக இளநீர், செவ்விளநீரின் தேவை அதிகமானது. தற்போது இளநீர் உற்பத்தி அதிகமாக இருப்பதுடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும். ஐதரபாத், பெங்களூர், மும்பை உள்ளிட்ட வெளி  மாநிலங்களுக்கு லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாங்கனங்களில் கடந்த இரண்டு வாரமாக அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் தற்போது ரூ.19 அல்லது ரூ.20க்கு என மிகவும் குறைவான விலைக்கு வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இளநீர் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், விலை சரிவால் உரிய விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும், வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, அதன்விலை உயர வாய்ப்புள்ளது  என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : villages , In the villages, brewery, produce
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு