×

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்: விலை கிடைக்காததால் உற்பத்தியாளர்கள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய்களில் பொங்கல் பண்டிகை  நெருங்குவதால் சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான கண்ணப்பன்நகர், மோதிராபுரம், அம்பராம்பாளையம், கோமங்கலம், கோட்டூர், சேரிபாளையம், ஆண்டிபாளையம், அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் 75க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு காளவாய்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் சுண்ணாம்பு கல் கட்டிடம் கட்டுவதற்கும், வீட்டு கூரையின் மேல்பகுதியில் சுருக்கிபோடவும், வர்ணம் பூசுவதற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி உள்ளூர், வெளியூரை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றனர். இதனால் அந்நேரத்தில் சுண்ணாம்பு கல் விற்பனை அதிகமாக இருந்ததுடன், அதன் உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு லாபம் கிடைத்து. நாளடைவில் கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்து வந்ததால் சுண்ணாம்பு தேவை  குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு சொற்ப லாபமே கிடைந்தது.

இந்நிலையில், தற்போது வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை, நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்ாக வீடுகளில் வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கற்களை வாங்கி செல்வதை கிராம பகுதியினர்  வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சுண்ணாம்பு கல்லுக்குண்டான உரிய விலை கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுண்ணாம்பு கல் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,
 ‘‘பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே சுண்ணாம்பு கல் கிடைக்கிறது. அதை காளவாயில் வேகவைத்து விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது விற்பனை அதிகமாக  இருக்கும். பொங்கல் பண்டிகை முடியும் வரை தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இருக்கும். இந்த தொழிலில் 75 சதவீதம் பெண்களே ஈடுபடுகின்றனர். பொங்கல் பண்டிகை மட்டுமின்றி பிற பண்டிகை நாட்களிலும் தங்கள் வீடுகளில் வர்ணம் பூச கிராமம் மற்றும் வெளியூர்களில் இருந்து நேரடியாக வாங்கி சென்றனர். தற்போது பெரும்பலான வீடுகளுக்கு வண்ண வண்ண கலரில் வர்ணம் பூசுவதால், கடந்த சில ஆண்டுகளாக காளவாய்களில் சுண்ணாம்பு விற்பனை குறைந்துள்ளது.

மேலும், வெளியூர்களில் இருந்து ஆர்டர் இந்த முறை மிகவும் குறைவாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு  25 கிலோ எடை கொண்ட ஒரு சுண்ணாம்பு பை ரூ.80முதல் ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போதும், அதே விலை நீடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வாகனங்களில் ஓடைக்கல் எடுத்துவர அதற்குறிய வாடகை கட்டணம் கூடுதலாகிறது. தொழிலாளர்களின் கூலித்தொகை போக லாபம் என்பது மிக, மிக குறைவாக உள்ளது. இருப்பினும், காலங்காலமாக செய்து வந்த இந்த தொழிலை கைவிடாமல் தொடர்ந்து நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலங்களில் இந்த தொழில் நலிவடையாமல் இருக்க அரசு மானியம் வழங்க வேண்டும்’ என்றார்.

Tags : festival ,Pongal ,Limestone , Pongal festival, limestone, manufacturers, agony
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா