×

திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களை முகம் சுழிக்க வைக்கும் கழிவுகள்

* விநாயகர் கோயில் அருகே குப்பைகள் குவிப்பு
* தெருவில் வீணாக பாயும் குடிநீர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் தெருவில் குடிநீர் வால்வு உடைந்து தண்ணீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் பாதிப்படைந்துள்ளனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் விட்டுச்செல்லும் கழிவுகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. திருச்செந்தூர் கோயில் நகரமாக இருப்பதால் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். மேலும் சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. திருச்செந்தூர் சன்னதி தெருவிலிருந்து வஉசி தெருவுக்கு செல்லும் வழியின் நுழைவாயிலில் குடிநீர் குழாய் வால்வு உள்ளது.

கடந்த ஒரு வாரமாக இந்த ரோட்டில் வாகனங்கள் அதிகமாக வந்ததால், அதன் அழுத்தத்தில் குடிநீர் வால்வு உடைந்து தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வழியாகத் தான் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து அலகு குத்தி ஊர்வலமாக செல்கின்றனர். குடிநீர் வால்வு உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு தமிழகமே குடிநீர் தட்டுப்பாட்டால் நிலை குலைந்தது. இப்போது சேமிக்கப்படும் தண்ணீர் தான் கோடை காலத்திற்கு கை கொடுக்கும். அந்த வழியாக செல்லும் பக்தர்கள் இப்படி குடிநீர் வீணாகிறதே என்று குமுறுகின்றனர்.

இதுபோல் கோயிலுக்கு செல்லும் பாதையில் உள்ள தூண்டிகை விநாயகர் கோயில் அருகே குப்பைகள் மண்டிக்கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகளை அகற்றுவதிலும் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.

Tags : devotees ,Thiruchendur , Thiruchendur, devotee, waste
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி