×

முதன் முதலாக விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு இட்லி, எக் ரோல், அல்வா: மைசூருவில் தயாரிக்கப்பட உள்ளது

பெங்களூரு: இந்தியாவின் சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பயணம் செய்யும் வீரர்களுடன் மைசூருவில் தயாரிக்கப்பட உள்ள இட்லி, எக்ரோல், வெஜ்ரோல் உள்ளிட்ட உணவு வகைகளும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்துவதில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. வளர்ச்சி அடைந்த அமெரிக்காவின் செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி  வரும் நிலையில், நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்தது. அது மட்டும் இன்றி செவ்வாய் உள்ளிட்ட கோள்களை ஆராய்ச்சி செய்வதிலும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில்  இஸ்ரோ தீவிரமாக இறங்கியுள்ளது. இஸ்ரோ தலைவர் கே.சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்காக விமானப்படையை சேர்ந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்கள். இரண்டாவது கட்டமாக வீரர்களுக்கு வரும் ஜனவரி 20ம் தேதி ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி  அளிக்கவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. விண்வெளி பயணத்திற்கான விண்கலம் தயாராகி வரும் நிலையில் வீரர்களுக்கான சிறப்பு உணவு வகைகளின் பரிசோதனையும் நடந்து வருகிறது. மைசூருவிலுள்ள பாதுகாப்பு துறையின்  உணவு  ஆராய்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) இட்லி, எக் ரோல், வெஜ் ரோல் மற்றும் பாசிப்பருப்பு அல்வா உள்ளிட்ட  உணவுகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இவை நீண்டக்காலம் வரை கெடாத வகையில் தயாரிக்கப்படுபவை. விண்வெளி வீரர்களுக்கு  தேவையான தண்ணீர், ஜூஸ் வகைகளை எடுத்துச்  செல்வதற்கான சிறப்பு குடுவைகளும், உணவுகளை சூடுபடுத்தி பயன்படுத்த தேவையான  ஓவென்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “விண்வெளி பயணத்தின்போது வீரர்களுக்கான உணவு வகைகள் டிஆர்டிஓ.வில் தயாரிக்கப்பட உள்ளது. விண்வெளியில் நமது வீரர்கள் 7 நாள் தங்கியிருப்பார்கள்’’  என்றார்.

Tags : spacewalkers ,Indian ,space flights ,Mysore ,Idly Indian , Idli, Ex Roll, Alva, Mysuru
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்