×

காபி, டீயில் பயன்படுத்த விமானங்களில் பயணிகளுக்கு தேன் பாக்கெட் வழங்க வேண்டும்: அமைச்சர் நிதின்கட்கரி வலியுறுத்தல்

புனே: விமானங்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் காபி, டீயுடன் சர்க்கரைக்கு பதிலாக தேன் பாக்கெட் வழங்கலாம் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார். புனேயில் நேற்று நடந்த  மத்திய தேன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் நிகழ்ச்சியில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் காபி, டீயில் சேர்த்துக் கொள்ள  சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அல்லது சர்க்கரைக் கட்டி வழங்கப்படுகிறது. மூன்று தேக்கரண்டி சர்க்கரையானது, ஒரு தேக்கரண்டி தேனுக்கு சமமானது. இதை மனதில் கொண்டு விமானங்களில் பயணிகளுக்கு சர்க்கரைக்கு பதிலாக தேன் பாக்கெட்  அல்லது தேன் கட்டியை வழங்கலாம். ஏர்இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோஏர் நிறுவன தலைவர்களுடனும், காதி கிராமயுத்யோக் ஆணைய தலைவருடனும் இதுதொடர்பாக வலியுறுத்தி உள்ளேன். அதேசமயம், பயணிகள் எதை  விரும்புகிறார்களோ அதை கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளேன்.

தேன் உற்பத்தியை பெருக்குவதற்காக, தேன் தயாரிப்பு மண்டலங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், பல்வேறு விதமான தேனை தயாரிக்கவும் மத்திய அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தேன் தயாரிப்பு  மண்டலங்கள், கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், கிராமப்புற பொருளாதாரத்தை ₹5 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். பால், மூங்கில், தேன், எத்தனால் அல்லது பயோ எரிபொருள் என  எதுவாக இருந்தாலும், இவற்றின் மூலம் கிராமப்புற பொருளாதாரம் பெரிதும் வளர்ச்சி அடையும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.



Tags : Nitin Gadkari ,passengers ,flights , Coffee, Tea, Minister Finance
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை...