×

ஜேஎன்யூ.வில் மர்ம கும்பல் தாக்குதல் மோடியின் மவுனம் உரத்த குரலில் பேசுகிறது: மார்க்சிஸ்ட் விமர்சனம்

புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரத்தில் பிரதமரின் மவுனம் உரத்த குரலில் பேசுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சித்துள்ளது.  டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யூ) மாணவர்கள்,  ஆசிரியர்கள் மீது கடந்த ஞாயிறன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில், 34 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இது தொடர்பாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மோடியின் மவுனம் உரத்த குரலில் பேசுகிறது. தனது இல்லத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக பிரதமர் குரல் கொடுக்காமல் இருப்பது அவர் உடந்தையாகவோ அல்லது தகுதியற்றவராகவோ இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

நிர்வாகத்தால் ஆதரிக்கப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த குண்டர்கள்தான் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. யார் தவறு செய்து இருந்தாலும் அரசாகவே இருந்தாலும் கூட  நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.  ஜேஎன்யூ, ஜமியா, அலிகார் முஸ்லிம் பல்கலை., ஜாதவ்பூர், ஐஐடி அல்லது ஐஐஎம்.கள் தனியாக இல்லை. இந்த அரசானது மாணவர்களை ஒடுக்குவது, நாட்டை பின்னோக்கி அழைத்து செல்வது,  பொருளாதார துயரங்கள், சமூக ஒற்றுமையின்மையை தங்கள் மீது திணிக்க விரும்புவதை மாணவர்களும், இளைஞர்களும் நன்கு அறிந்துள்ளனர்’ என்று கூறியுள்ளார். மேலும், நாடு முழுவதும் நடக்கும் பலபோராட்டங்களின்   புகைப்படங்களையும் இத்துடுன் அவர் இணைத்துள்ளார்.

Tags : Modi ,Marxist Criticism ,JNU , JNU, Marxist
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...