×

20,000 கோடியில் காவிரி-குண்டாறு திட்டம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: காவிரி - குண்டாறு திட்டம் ₹20 ஆயிரம் கோடி செலவில் மத்திய-மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று குடிமராமத்து திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி  பேசியதாவது: அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் தூர் வார வேண்டும் என்று கோரிக்கை வைத்து கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களும் கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தூர்வாருகின்ற பொழுது, அந்த வண்டல்  மண்ணை தான் அகற்றுகின்றார்கள். அதில் படிந்த வண்டல் மண் தான் அகற்றப்படுகிறது. அப்படி வண்டல் மண் அகற்றுகின்ற பொழுது, பெய்கின்ற மழைநீர் முழுவதும் அந்த ஏரியில் சேமித்து வைக்கப்படுகின்றது, ஊரணியில் சேமித்து  வைக்கப்படுகின்றது, குட்டையில் சேமித்து வைக்கப்படுகின்றது. ஆகவே, பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு நீர்கூட வீணாகக்கூடாது என்பதற்காக தான் இந்த தண்ணீர் சேமிப்பை அரசு செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.

குடிமராமத்து திட்டம் என்பது ஒட்டுமொத்த மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற திட்டம். தமிழகத்திலே எங்கெங்கு எல்லாம் நீர் வீணாக ஓடையின் வழியாக, நதியின் வழியாக, கடலில் போய் கலக்கின்றதோ, அந்த நீரை  ஆங்காங்கே தேக்கி வைத்து, அந்த நீர் சேமிக்கின்ற திட்டத்தை துவக்கி வைத்திருக்கின்றோம். அதன்மூலமாக அதிகமான தடுப்பணைகளை கட்டி கொண்டு இருக்கின்றோம். அதிகமான ஏரிகள், குளங்கள், ஊரணிகள் எல்லாம் தூர் வாரப்பட்டு  இருக்கிறது. காவேரி  - குண்டாறு பற்றி சொல்லி இருக்கின்றார்கள். அது ஒரு மிகப் பெரிய நீண்ட திட்டம். எடுத்து உடனே செய்ய முடியாது, 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம்.

அந்த அளவிற்கு தமிழக அரசிற்கு நிதி வசதி கிடையாது. மத்திய அரசை அணுகி, மத்திய அரசு - மாநில அரசும் இணைந்து இரண்டும் சேர்ந்து செயல்படுத்துவதற்காக இன்றைக்கு விரிவான திட்ட அறிக்கை  தயாரிக்கப்பட்டு வருகின்றது.  மத்திய நீர்வளத் துறை  அமைச்சரிடத்திலே நான் எடுத்து சொன்னேன், பிரதமரிடமும் எடுத்து சொல்லி இருக்கிறேன். அவர்களும் நமக்கு உதவி செய்வதாக இருக்கின்றார்கள். இந்த ஆண்டு இறுதியில் அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Edappadi , Cauvery, Gundaru Project, Chief Minister Edappadi
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்