×

சேலம் அருகே 5 கோடி ஐம்பொன் சிலை மீட்பு: விவசாயி கைது

கெங்கவல்லி: சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் 5 கோடிக்கு விற்பனை செய்வதற்காக தோட்டத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐம்பொன் சிலையை, சென்னை சிலை தடுப்பு போலீசார் நேற்று மீட்டு விவசாயியை கைது செய்தனர்.  
சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த ராஜசேகர்(42) என்பவரது வீட்டில் ஐம்பொன் சிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை சிலை  திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ராஜாராம் தலைமையிலான குழுவினர் நேற்று காலை 9 மணியளவில் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள ராஜசேகரின் விவசாய தோட்டத்தில் அதிரடியாக புகுந்து  சோதனை நடத்தினர்.  அங்குள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை ஒன்றை கைப்பற்றினர்.

அந்த சிலை 1.5 அடி உயரமும், 6.5 கிலோ எடையும் இருந்தது. ஐம்பொன் சிலையை 5 கோடிக்கு விற்பனை செய்ய இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிலையை பறிமுதல் செய்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு  போலீசார், விவசாயி ராஜசேகரை கைது செய்தனர். அது எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது? இதில் ஈடுபட்ட நபர்கள் யார் யார்?  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ராஜசேகருடன் ஐம்பொன் சிலையை போலீசார்  நேற்று மாலை சென்னை கொண்டு சென்றனர்.

Tags : Salem Salem , Salem, Imbon statue, farmer arrested
× RELATED சேலம் அருகே ரூ.300 கோடி மோசடி செய்த புகாரில் பாஜக பிரமுகர் மீண்டும் கைது..!!