×

ஜேஎன்யு வன்முறையை நாங்கள்தான் நடத்தினோம்: இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பேற்பு

புதுடெல்லி: டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்துக்கு ‘இந்து ரக்‌ஷா தளம்’ பொறுப்பேற்றுள்ளது.  டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் (ஜேஎன்யு), கடந்த ஞாயிறன்று கலவரம் வெடித்தது.  வெளியாட்கள் பலர் பயங்கர ஆயதங்களுடன்  முகத்தை துணியால் மூடியவாறு வளாகத்தினுள் நுழைந்து அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றினர். பல்கலையில் இருந்த பொது  சொத்துக்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 34 பேர் படுகாயமடைந்தனர். மர்ம நபர்கள் முகமூடி அணிந்து இருந்த புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு  ‘இந்து ரக்‌ஷா தளம்’  என்ற அமைப்பின் பிங்கி சவுத்ரி என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘ஜேஎன்யுவில் நடந்தவற்றிற்கான பொறுப்பை இந்து ரக்‌ஷா தளம் அமைப்பின்,  பூபேந்திர தோமர், பிங்கி சவுத்ரி ஆகியோர் ஏற்றுக்கொள்கிறோம். தேச விரோத நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால்  அவர்களும் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்த அதேபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். ஜேஎன்யு கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாது’’ என்று  கூறியுள்ளார். இவர் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.  இதற்கிடையே, பல்கலை போராட்டத்தில் காயம் அடைந்த மாணவ தலைவர் அசிகோஷ் உள்ளிட்டோர் காவலரை தாக்கியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

நடிகை தீபிகா படுகோனே மாணவர்களுக்கு ஆதரவு
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நேற்று இரவு நடிகை தீபிகா படுகோனே சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அங்கு அவர் சில மாணவர்களிடம் தனித்தனியாக பேசினார். பின்னர் அவர் அளித்த  பேட்டியில், ‘‘மாணவர்கள் பயப்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது, மிகப்பெரிய விஷயம்’’ என்று தெரிவித்தார்.

போராட்டத்தில் மாணவர்களுடன் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்கள்
டெல்லி ஜே.என்.யு. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தென் மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் நடைபெற்ற கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்களும் பலரும் கலந்து கொண்டனர்.  இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், ரீமா கக்டி, அனுபவ் சின்ஹா, நடிகைகள் டாப்சி பன்னு, தியா மிர்சா, சவாரா பாஸ்கர், இசையமைப்பாளர்கள் விஷால் பரத்வாஜ், நடிகர் சவுரப் சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : JNU ,Hindu Raksha , JNU Violence, Hindu Raksha Site
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு