×

வியாசர்பாடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் திறந்தநிலை மின் பெட்டிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பெரம்பூர்: சென்னையில் வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் வாரியம் சார்பில் சாலையோரங்களில் ஆங்காங்கே மின் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மின் பெட்டிகளை முறையாக பராமரிக்காததால், பல இடங்களில் உடைந்து சாய்ந்த நிலையிலும், திறந்த நிலையிலும் ஆபத்தான முறையில் உள்ளன. குறிப்பாக, வடசென்னையில் குடியிருப்பு பகுதி, தெருக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் பெட்டிகளின் கதவு உடைந்து, திறந்த நிலையில் உள்ளதால், பொதுமக்கள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த திறந்தவெளி மற்றும் தாழ்வான மின் பெட்டிகளால் மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன், 2 சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, மின்வாரியம் சார்பில், தாழ்வான மற்றும் திறந்தநிலை மின் பெட்டிகளை சீரமைக்க பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதன் மூலம் பெயரளவுக்கு சில இடங்களில் மட்டும் சீரமைப்பு பணி நடைபெற்றது.

குறிப்பாக வட சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும், இதுபோன்ற திறந்தநிலை மின் பெட்டிகளை காண முடிகிறது. இதன் அருகே சிறுவர்கள் விளையாடுவதால் மக்கள் பீதியுடனே உள்ளனர். வியாசர்பாடி, பி.கல்யாணபுரம் 3வது தெரு, பாடிகாட் முனீஸ்வரன் கோயில் அருகிலுள்ள மின்சார பெட்டியில் மின்சார வயர்கள் தரையில் தொடும்படி உள்ளது. மேலும், அந்த பெட்டியில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் பாதுகாப்பில்லாத வகையில் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.

இதனால் இந்த பகுதியில் சிறுவர்கள் மற்றும் பாதசாரிகள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சாலையில் உள்ள இந்த ஆபத்தான மின் பெட்டியை சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த பகுதியில் இதுபோல் பல இடங்களில் திறந்தநிலை மின் பெட்டிகள் உள்ளதால், மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிகளில் உள்ள தாழ்வான மற்றும் திறந்தநிலை மின் பெட்டிகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Civilians ,Vyasarpadi Area Vyasarpadi Area , Vyasarpadi area, public, power boxes, officials
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...