×

கத்திவாக்கத்தில் பைப்லைன் உடைந்து சாலையில் வழிந்தோடிய குடிநீர்: அதிகாரிகள் அலட்சியம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் கத்திவாக்கத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு புழல் ஏரியிலிருந்து குழாய் மூலமாக கத்திவாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் வீடுகளுக்கு பொது குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கத்திவாக்கம் மேம்பாலம் அருகே இதற்கான பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி சாலைகளில் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பல மணி நேரத்திற்கு பின்பு குழாயில் தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உயர் மின் அழுத்த வயரை புதைக்க சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இவ்வாறு தோண்டும் போது பல இடங்களில் குடிநீர் குழாய் பழுதடைந்தது. அதனை சரி செய்யாமல் அப்படியே மணலைப் போட்டு மூடி விட்டதால் குடிநீர் வரும்போது அழுத்தம் தாளமுடியாமல் பழுதடைந்த இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதுபோல் அடிக்கடி பல இடங்களில் குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வெளியேறுவதால் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது” என்றனர்.

Tags : roadway , Screaming, pipeline, broken, road, drinking water, authorities
× RELATED திருமங்கலம் குண்டாற்றில் புதிய ஆறுகண் பாலப்பணிகள் துவக்கம்