×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பைப்லைன் உடைந்து வீணாக வழிந்தோடிய குடிநீர்: நோயாளிகள், மருத்துவர்கள் அவதி

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு எலும்பு முறிவு, இதயம், கல்லீரல், நரம்பியல், பிளாஸ்டிக் சர்ஜரி, பல் மருத்துவம், குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளியாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அறுவை சிகிச்சை பெறுபவர்களை தங்க வைக்க 8 மாடி கட்டிடம் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை திடீரென 3வது மாடியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக ஓடியது.

இதனால் நோயாளிகள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலைமை ஏற்பட்டது. அதேபோல் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தேங்கிய தண்ணீரில் நடந்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால், உடைந்த பைப்லைனை சீரமைக்கவும், தேங்கிய நீரை அகற்றவும் மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி குளம்போல் தேங்கியது. மேலும், நோயாளிகள் கழிவறையில் தண்ணீர் வராமல் அவதிபட்டனர். இந்த மருத்துவமனையில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய கூடிய பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

Tags : Doctors , Stanley, Government Hospital, Pipeline Break, Drinking Water, Patients, Doctors, Avi
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை