×

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து இன்று நாடு தழுவிய ஸ்டிரைக்

* 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு
* பல்வேறு அமைப்புகளும் ஆதரவு

புதுடெல்லி: மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கும் இப்போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் ேகங்வாரை, தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் சந்தித்து பேசினர். இதில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுத்தல், வங்கிகள் இணைப்பை கைவிடுதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதன்படி, இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம் (ஏஐடியுசி), இந்து மஸ்தூர் சபா (எச்எம்எஸ்), அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (சிஐடியு), தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு, சுயதொழில் மகளிர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் ஆகிய வங்கித் துறை சார்ந்த தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜவின் பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவு சங்கங்கள் மட்டும் பங்கேற்கவில்லை. வங்கிகள் போராட்டத்தால் தமிழகத்தில் இன்று மட்டும் ரூ.6,500 கோடி மதிப்பிலான காசோலை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: வங்கிகளை தனியார் மயம் ஆக்கக்கூடாது, வங்கிகளை இணைக்கக்கூடாது, இணைப்பு என்ற முறையில் வங்கி கிளைகளை மூடக்கூடாது, உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்ததன் அடிப்படையிலும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

போராட்டத்தில் அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், ரிசர்வ் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமிய வங்கிகள் பங்கேற்க உள்ளன. இதில் இந்தியா முழுவதும் உள்ள வங்கி துறையை சார்ந்த 5 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் மட்டும் ஊழியர்கள், அதிகாரிகள் என 30 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை 10 மணியளவில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இன்றைய தினம் வங்கிகள் இயங்காது. வங்கிகளில் அதிகாரிகள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வேலை பார்க்க மாட்டார்கள். ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னை காசோலை பரிவர்த்தனை நிலையத்தில் மட்டும் சுமார் ரூ.6,500 கோடி பெருமானமுள்ள 8 லட்சம் காசோலைகள் முடங்கும் நிலை ஏற்படும். இந்தியா முழுவதும் ரூ.21,500 கோடி பெருமானமுள்ள 28 லட்சம் காசோலைகள் முடங்கும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மற்ற தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.

அரசு எச்சரிக்கை

போராட்டம் குறித்து மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில், ‘‘எந்த வகையிலும் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது சம்பள பிடித்தம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்ட எந்த வகையிலான போராட்டத்திலும் பங்கேற்பது விதிமீறலாகும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் எதுவுமில்லை’’ என கூறி உள்ளது. அதே போல, இன்று பணிக்கு வரும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Tags : strike ,government , nationwide strike,economic policies, central government
× RELATED சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை