×

பேரவையில் திமுக, அதிமுக இடையே மோதல் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடந்ததா? : ஜெ.அன்பழகன் பேச்சால் அமளி

பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்: உள்ளாட்சி தேர்தலில் 60 சதவீதம் வாக்குகள் பெற்று திமுக வெற்றி பெற்றது. ஆனால் ஆளுங்கட்சியினர் முறைகேடு செய்யாமல் இருந்தால் 80 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருப்போம். சிறுபான்மையினர் என்று சொன்னாலே இந்த அரசுக்கு கசக்கிறது.

அமைச்சர் செங்கோட்டையன்: சிறுபான்மையினரை பாதுகாக்கும் அரசாக, அதிமுக அரசு உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: அதே சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பது நியாயமா?
அமைச்சர் வேலுமணி: நம்முடைய முதல்வர், உள்துறை அமைச்சரை சந்தித்து இந்த சட்டத்தால் எங்கள் மாநிலத்திலுள்ள சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கூறியுள்ளார்.
துரைமுருகன் (எதிர்க்கட்சி துணைத்தலைவர்): குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை தான் எதிர்க்கிறோம்.
ஜெ.அன்பழகன் எம்எல்ஏ: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு முறைகேடு செய்துள்ளது. இது எங்களுக்கு தேய்பிறை இல்லை. வளர்பிறை தான் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். உள்ளாட்சி தேர்தலை திமுக நேர்மையாக சந்தித்தது. (அப்போது அமைச்சர் வேலுமணி பேச எழுந்தார்) அப்போது திமுக எம்எல்ஏ அன்பழகன் எழுந்து ஒரு வார்த்தையை சொன்னார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று குரல் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
சபாநாயகர் தனபால்: அமைச்சரை ஒருமையில் பேசுவது முறையற்ற செயல். உறுப்பினர் அன்பழகனை வன்மையாக கண்டிக்கிறேன்.
அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்: உறுப்பினர் அன்பழகன் அமைச்சரை ஒருமையில் பேசியுள்ளார். அவையிலிருந்து அவரை வெளியேற்ற வேண்டும். (திமுகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
மு.க.ஸ்டாலின்: பல அமைச்சர்கள் குறுக்கீடு செய்து பேசினர். முதல்வர் கூட சில விளக்கங்களை அளித்தார். சொல்லக்கூடாத வார்த்தையை அவர் சொன்னதாக கூறுகிறீர்கள். அவர் பேசியது தவறுதான். அதே வார்த்தையை அதிமுக வரிசையில் முன்னணியில் உள்ளவர்களும் பேசினார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனி சாமி: இங்கே இருக்கின்ற திமுக உறுப்பினர்களில் ஜெ.அன்பழகன்  ஒருவர்தான் பிரச்னைக்குரியவர். கவர்னர் உரை மீது பேசியிருந்தால் எந்த பிரச்னையும் கிடையாது. அதற்கு மீறி பேசும் போது தான் பிரச்னையே உருவாகின்றது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் நேர்மையோடும், நீதியோடும், தர்மத்தோடும், நடுநிலையோடும் செயல்பட்டு இருக்கின்றார்கள்.
துரைமுருகன்: உள்ளாட்சி தேர்தல் நடந்தது என்று சொல்லுங்கள், நேர்மையாக நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜெ.அன்பழகன்: அமைச்சர் பற்றி நான் கூறியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
சபாநாயகர் தனபால்: எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக் கொண்டதால் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜெ.அன்பழகன்: பழையதை பற்றி நினைக்காதீர்கள். என்னை புதிதாக பாருங்கள். இது 20/20 கிரிக்கெட் மாதிரி. கொஞ்சம் வேகமாக தான் செயல்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

வாக்கு சதவீதம் எவ்வளவு?


முதல்வர் பேசியதாவது: ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை பொறுத்தவரைக்கும் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 43.73 சதவிகிதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. திமுக கூட்டணி 45.32 சதவிகிதம் பெற்றிருக்கிறது. திமுக 1.59% வாக்குகள் தான் வித்தியாசமாக இருக்கிறீர்கள். அதேபோல மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 39.60 சதவிகிதம் வாக்குகள் அதிமுக கூட்டணி பெற்றிருக்கிறது. திமுக கூட்டணி 40.35% வாக்குகள் பெற்றிருக்கிறது. 0.75% தான் நீங்கள் (திமுக) அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Conflict ,AIADMK ,DMK ,speech ,J.Abalankan ,Speaker , Conflict between DMK and AIADMK, local body, J. Announced by the speaker
× RELATED ஆட்சியில் இருக்கும்போது...