×

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு 16,075 பஸ்கள் இயக்கம்

* இதுவரை 65,655  பயணிகள் முன்பதிவு
* 3.48 கோடி ரூபாய் வசூல்

சென்னை: ‘‘சென்னையிலிருந்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக 16,075 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுவரையில் மொத்தம், 65,655  பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.  இதன் மூலம் 3.48 கோடி ரூபாய்  வசூலாகியுள்ளது’’ என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று மாநகர் போக்குவரத்துக் கழக கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், போக்குவரத்துத்துறை துணைச் செயலாளர் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசுகையில்,  கடந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு,  ஜனவரி 11 முதல் 14ம் தேதி வரை கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், மாதவரம், பூவிருந்தவல்லி, கே.கே.நகர் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன் 4,537 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் 7,17,392 பயணிகள் பயணம் செய்தனர். இதன் மூலம் 22.94 கோடி வருவாய் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதே போல 5 பஸ் நிலையங்களில் இருந்து ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகள் 4,950 என சென்னையிலிருந்து 16,075 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பிற ஊர்களிலிருந்து 9,995 சிறப்பு பேருந்துகளும்  இயக்கப்படவுள்ளன.  இதற்காக 15 முன்பதிவு சிறப்பு மையங்கள் நாளை முதல் 14ம் தேதி வரை செயல்படும். இதில் தாம்பரம் சானிட்டோரியம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் செயல்படும் சிறப்பு முன்பதிவு மையங்களில் நாளை முதல் முன்பதிவு நடக்கிறது. இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பொங்கல்  பண்டிகை முடிந்து பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவித்திட ஏதுவாக, 9445014450, 9445014436 என்ற தொலைபேசி எண்களை (24X7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு வாயிலாக இதுவரையில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 42,120 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 23,535 பயணிகளும் மொத்தம், 65,655 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.  இதன் மூலம் 3.48 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது’ என்று தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டியில், ‘‘ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. திடீரென கூடுதல் பஸ்கள் தேவைப்படும் போது பயன்படுத்துவதற்காக 200 எம்டிசி பஸ்கள் தயார் நிலையில் இருக்கும். இவ்வாண்டு 8 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்கிறோம்’’ என்றார்.

எந்த ஊருக்கு எங்கிருந்து செல்வது?

வழித்தட மாற்றம்: முன்பதிவு செய்த  பேருந்துகள் எம்ஜிஆர் பேருந்து நிலையம்  கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு  பூந்தமல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றி செல்லும்.

* தாம்பரம் அண்ணா பேருந்துநிலையத்திலிருந்து  விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூருக்கு பஸ்கள்  இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம் திண்டிவனம்  மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்பட்டு,  வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம்  வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில்  மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும்  பேருந்துகள் இயக்கப்படும்.

* பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து  வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர்  செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும்  பேருந்துகள் இயக்கப்படும்.

* கோயம்பேட்டிலிருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில்,  கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி,  புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு,  ஊட்டி,  ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

* திருத்தணி வழியாக  திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து  இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆந்திரா மார்க்கமாக  செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்  இயக்கப்படும்.

வெப்சைட் அறிவிப்பு

பயணிகள் முன்பதிவு செய்து  கொள்ள, நடை முறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணையதள வசதியான  www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.com, www.busindia.com,  www.mackemytrip.com மற்றும் www.goibibo.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும்  முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கோயம்பேடு  பேருந்து நிலையத்தில் முன் பதிவு கவுண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு  வருகிறது.

Tags : Chennai ,Pongal ,districts , 16,075 buses ply , Chennai ,various districts,celebrate Pongal
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3...