×

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்ய முடியாது என்றும் அவரது கோரிக்கை 2018ம் ஆண்டிலேயே நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  மனு தாக்கல் செய்தார். அதில், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில் அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாளே தன்னை விடுவிக்காமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், நளினி உள்ளிட்ட 7 பேரை  விடுவிக்க அனுமதி கேட்டு கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு அனுப்பிய மனுவை கடந்த  2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு நிராகரித்து விட்டது என்று அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், நாட்டின் முன்னாள் பிரதமர் உட்பட 15 பேரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய  இவர்களை விடுவித்தால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில்  மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு இது தொடர்பாக ஜனவரி 28ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு  உத்தரவிட்டனர்.

Tags : death ,Nalini ,Rajiv , Nalini convicted,Rajiv murder case ,released
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...