×

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தூர்: இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கவுகாத்தியில் கடந்த 5ம் தேதி நடைபெற இருந்த முதல் போட்டி மழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2வது டி20 போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இரு அணிகளிலுமே மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ இருவரும் இலங்கை இன்னிங்சை தொடங்கினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 4.4 ஓவரில் 38 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். அவிஷ்கா 22 ரன் எடுத்து (16 பந்து, 5 பவுண்டரி) சுந்தர் சுழலில் சைனி வசம் பிடிபட்டார். குணதிலகா 20 ரன் எடுத்து சைனி வேகத்தில் கிளீன் போல்டானார். ஒஷதா பெர்னாண்டோ 10 ரன்னில் வெளியேற, அதிரடியாக விளையாடிய குசால் பெரேரா 34 ரன் (28 பந்து, 3 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் தவான் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பானுகா ராஜபக்ச 9 ரன், தசுன் ஷனகா 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஷர்துல் தாகூர் வீசிய 19வது ஓவரில் தனஞ்ஜெயா டி சில்வா (17 ரன்), இசுரு உடனா (1), கேப்டன் லசித் மலிங்கா (0) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பூம்ரா வீசிய 20வது ஓவரின் கடைசி 3 பந்தையும் வனிந்து ஹசரங்கா டிசில்வா பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்.

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. ஹசரங்கா 16 ரன் (10 பந்து, 3 பவுண்டரி), லாகிரு குமாரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 3, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி தலா 2, சுந்தர், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்திய அணி 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. கே.எல்.ராகுல், ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 71 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

ராகுல் 45 ரன் (32 பந்து, 6 பவுண்டரி), தவான் 32 ரன் (29 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஹசரங்கா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். இந்தியா 11.2 ஓவரில் 86 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து சற்றே தடுமாறியது. இந்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர்34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில்  இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. விராத் கோஹ்லி 30 ரன், ரிஷப் பண்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி புனேவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

Tags : win ,India , 7 wickets, difference, India, win
× RELATED “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும்...