×

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

கேப் டவுன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 189 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 269 ரன், தென் ஆப்ரிக்கா 223 ரன் எடுத்தன. 46 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 391 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் டோம் சிப்லி ஆட்டமிழக்காமல் 133 ரன் விளாசினார். இதைத் தொடர்ந்து, 438 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்திருந்தது. பீட்டர் மாலன் 63 ரன், மகராஜ் 2 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். மகராஜ் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டர்சன் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் டு பிளெஸ்ஸி 19 ரன் எடுத்து பெஸ் பந்துவீச்சில் டென்லி வசம் பிடிபட்டார். பொறுப்புடன் விளையாடிய பீட்டர் மாலன் 84 ரன் எடுத்து (288 பந்து, 3 பவுண்டரி) சாம் கரன் வேகத்தில் ஸ்டோக்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மிக நிதானமாக விளையாடி நேரத்தை கடத்திய டி காக் 50 ரன் (107 பந்து, 7 பவுண்டரி), வான் டெர் டஸன் 17 ரன் (140 பந்து, 2 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். தென் ஆப்ரிக்க அணி தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடிய நிலையில்... பிரிடோரியஸ் 0 (22 பந்து), நோர்ட்ஜே 0, பிலேண்டர் 8 ரன் (51 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

தென் ஆப்ரிக்கா 137.4 ஓவரில் 248 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்து 189 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரபாடா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 3, ஆண்டர்சன், டென்லி தலா 2, பிராடு, பெஸ், கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 30 புள்ளிகளை தட்டிச் சென்றது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் போர்ட் எலிசபத்தில் ஜன. 16ம் தேதி தொடங்குகிறது.

Tags : England ,South Africa , South Africa, down, England
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது