×

பிப். 8ம் தேதி வாக்குப்பதிவு டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி?: கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்

புதுடெல்லி: வருகிற பிப். 8ம் தேதி டெல்லி சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம்ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று, கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவையின் ஆயுட்காலம் 2020 பிப். 22ம் தேதியுடன் முடிகிறது. 2015ம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களைப் பெற்று அபாரமாக வென்றது. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. இம்முறை கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்க ஆம் ஆத்மி கட்சி களம் இறங்கி தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பாஜக முதல்வர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பாஜக பிரசாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ேநற்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நிருபர்களிடம் கூறுகையில், “70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவையின் பதவிக்காலம் பிப். 22ம் தேதியுடன் முடிவடைகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. ஜன. 1ம் தேதி நிலவரப்படி 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது. ஜன. 14ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப். 8ம் தேதி வாக்குப்பதிவும், 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்” என்றார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி 59 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அந்தக் கணப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும்கூட டெல்லியில் தொடரும் பல்வேறு போராட்டங்களால், அங்கு அரசியல் சூழல் அமைதியற்ற நிலையிலேயே நீடிக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையிலான அரசியலால் டெல்லியின் வளர்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் (ஷீலா தீட்ஷித்) 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினார். அப்போது ஐந்து ஆண்டுகள் மத்தியில் பாஜக அரசுதான் இருந்தது. ஆனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்கு சதவீதம் 22 சதவீதமாகவும், ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு 18 சதவீதமாகவும் உள்ளது. தலைநகரில் குற்ற எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமான நிலைமைக்கு பாஜகவே காரணம்’’ என்றார்.


Tags : Pip ,AAP ,Delhi , Pip. ,AAP rules, Delhi ,polling,
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...