×

நெல்லை மாவட்டத்துடன் சேர்க்க வலியுறுத்தி அடைச்சாணி கோயிலில் 8 மணி நேரம் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்: வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

பாப்பாக்குடி: நெல்லை மாவட்டத்துடன் அடைச்சாணியை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி கிராம மக்கள், கோயில் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டதுடன், பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்பட்ட போது, அம்மாவட்டத்துடன் அம்பை தாலுகாவில் இருந்த ஆழ்வார்குறிச்சி குறுவட்டம் சேர்க்கப்பட்டது. பாப்பாக்குடி ஒன்றியம் இடைகால், பள்ளக்கால், பனஞ்சாடி, ரெங்கசமுத்திரம், கடையம் ஒன்றியம் அடைச்சாணி உள்ளிட்ட கிராம மக்கள், தென்காசி மாவட்டத்தில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தனர்.5 கிமீ தொலைவில் உள்ள அம்பை தாலுகாவிற்கு சென்று வர பஸ் வசதிகள் அடிக்கடி இருக்கும் நிலையில், தென்காசியுடன் இணைக்கப்பட்டால் 40 கிமீ தொலைவில் உள்ள தென்காசிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என புகார் தெரிவித்து ெதாடர் போராட்டங்களை மேற்கொண்டனர். இதையடுத்து அடைச்சாணி கிராமம் தவிர்த்து பிற கிராமங்களை நெல்லை மாவட்டம் அம்பை வட்டத்தில் சேர்த்து கடந்த டிச.21ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் அடைச்சாணியை மீண்டும் நெல்லை மாவட்டத்தில் இணைக்காததை கண்டித்து நேற்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலைக்கு செல்லவில்லை. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வகுப்புகளை புறக்கணித்தனர். அடைச்சாணியில் உள்ள 2 அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி வெறிச்சோடியது. மேலும் அடைச்சாணி மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பை வட்டத்தில் அடைச்சாணியை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.தகவலறிந்து கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகையா விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரது சமரசத்தை ஏற்க மறுத்த அவர்கள், உயரதிகாரிகள் வந்து உறுதியளிக்கும் வரை போராட்டத்தை தொடருவதாக அறிவித்தனர். காலை 9 மணிக்கு போராட்டம் தொடங்கிய நிலையில், மதியம் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். உயரதிகாரிகள் யாரும் வராத நிலையில், மாலை 4.30 மணிக்கு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். இன்று (7ம் தேதி) தென்காசி கலெக்டரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துவிட்டு அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படுமென அனைத்து சமுதாய போராட்டக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.கிராம மக்களின் போராட்டத்தையொட்டி பாப்பாக்குடி, அம்பை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Tags : village sittings ,areas , Students , rural areas,eight hours, classes
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்