×

ஸ்ரீரங்கம் கோயிலில் ராப்பத்து திருநாள் தொடக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து ராப்பத்து திருநாள் நேற்று துவங்கியது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி  விழா கடந்த மாதம் 26ம் தேதி  திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 27ம் தேதி பகல்பத்து நிகழ்ச்சி துவங்கி நேற்றுமுன்தினம் முடிவடைந்தது. பகல் பத்து நிகழ்ச்சிகளில் தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதைத்தொடர்ந்து ராப்பத்து முதல் நாள் தொடக்கமும், சொர்க்கவாசல் திறப்பும் நேற்று நடந்தது. நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு  பரமபத வாசல் எனும் சொர்க்கவாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபம் முன்பு மணல் வெளியில் எழுந்தருளினார்.

பகல்பத்து உற்சவத்தின்போது நம்பெருமாள் தினமும் அர்ஜுனமண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம் . பகல்பத்து நாட்களில் திருமொழி பாசுரங்களும், ராப்பத்து நாட்களில் திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயம், வியாக்யானங்களுடன் அரையர்களால் பாடப்படும்.இன்று ராப்பத்து உற்சவத்தின் 2ம் நாளையொட்டி மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்படுகிறார். மதியம் 1 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. மதியம் 2.30 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். இரவு 8 மணி வரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ராப்பத்து திருநாட்களிடல்  தினமும் நண்பகல் 12 மணி அளவில்  நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை சேருவார். அங்கு இரவு 9.30 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து உற்சவத்தின் 7ம் நாளான வரும 12ம் தேதி திருக்கைத்தல சேவை, 13ம் தேதி  திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 15ம் தேதி தீர்த்தவாரி , 16ம் தேததி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமுறை ஆகியவை நடைபெற உள்ளனவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர்  பொன்.ஜெயராமன், உபயதாரரர்கள், கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.




Tags : Rappattu Thirunal Day ,Srirangam Temple ,Srirangam , Srirangam, temple, Rappattu Thirunal, Day
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...