×

மணிமுத்தாறு அருவியில் காணும் பொங்கலன்று குளிக்க அனுமதி வழங்கப்படுமா?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

அம்பை: நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வரும் காணும் பொங்கல் அன்று குளிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இயற்கை எழில் சூழ்ந்த மணிமுத்தாறு அருவிப்பகுதியில் பொங்கல் விடுமுறையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குற்றாலத்திற்கு அடுத்தபடியாக மணிமுத்தாறும் பாபநாசமும் விளங்குகிறது. ஆண்டு முழுவதும் கொட்டும் அருவிகள் இங்கிருப்பதால் இதற்கு சுற்றுலா பயணிகள் இடையே கூடுதல் மவுசு உண்டு. மேலும் அணையும் அதனை சார்ந்த பசுமையும் குளிர்ந்த காற்றும் மனதிற்கும் உடலுக்கும் இதமாக விளங்குவதால் மணிமுத்தாறுக்கு நாள்தோறும் ஏராளமானோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து சென்றனர்.அம்பாசமுத்திரம் புலிகள் வனச்சரகத்திற்குட்பட்ட மணிமுத்தாறு வனச்சாவடியில் இருந்து தலையணை வரை உள்ள 6.6 கி.மீ சாலை நடப்பதற்கு கூட லாயக்கற்ற நிலையில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் தோன்றி காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைந்தும், வாகனங்கள் அடிக்கடி பழுதாகும் நிலையும் கடந்த சில ஆண்டுகளாக காணப்பட்டது.

இந்நிலையில் அச்சாலையை செப்பனிட அரசு ஒதுக்கீடு செய்த 1.87 கோடியில் 3மீ அகலம் 6.6 கிமீ தூரம் 10 செமீ உயரத்திற்கு பெட் மிக்ஸ் போட்டு தார் சாலை அமைக்கும் பணி திருச்சி வனத்துறை பொறியியல் கோட்டம் சார்பில் கடந்த ஆண்டு ஏப். 26ம் தேதி தொடங்கியது. பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை காரணம் காட்டி வனத்துறை கடந்த 8 மாதங்களாக அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இது குறித்து தினகரன், தமிழ்முரசு பத்திரிக்கைகளில் செய்தியும் வெளியாகியுள்ளது. மேலும் சாலை பணிகள் தேக்கம் குறித்து நெல்லை ரயில்வே முன்னாள் மேலாளர் ஜான்சன அப்பாத்துரை என்பவர் மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் கடந்த டிச.23ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆணையத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதேபோல் டிச 26.ம்தேதி மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் அருவி சாலையை ஆய்வு செய்தார். ஆய்வின் போதும் விசாரணையின் போதும் ஆஜரான வனத்துறை அதிகாரிகள் வரும் பொங்கலுக்கு முன் சாலை சீரமைத்து விடுவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. சாலை பணிகள் தாமதம் காரணமாக மனித உரிமைகள் ஆணையத்தின் கண்டனத்திற்கும் வனத்துறை உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மற்றும் மறுநாள் காணும் பொங்கலை கொண்டாட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற பகுதிகளை சார்ந்த சுற்றுலா பயணிகளும் மணிமுத்தாறு அணை மற்றும் பூங்கா பகுதிக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அணைப்பூங்கா பகுதியில் முகாமிட்டு பூங்காவில் காலை முதல் மாலை வரை பொழுதை களிப்பர். மேலும் மணிமுத்தாறு அருவிக்கு சென்று குளித்து மகிழ்வர்.வரும் ஜன. 15 முதல் 19 வரை பொங்கல் பண்டிகை விடுமுறை காலம் என்பதால் அந்நாட்களில் பொதுமக்கள் கூட்டம் மணிமுத்தாறை நோக்கி படையெடுக்கும். மேலும் காணும் பொங்கலுக்கு மணிமுத்தாறை நாடி அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவர். எனவே மணிமுத்தாறு சாலையை விரைந்து செப்பனிட்டு, பொங்கல் விடுமுறைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வனத்துறை முன்வரவேண்டும். மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கி, மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஊத்து பஸ்கள் இயக்கப்படுமா?
மணிமுத்தாறு அருவிக்கு மேல்பகுதியில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளுக்கு மட்டுமே தற்போது 3 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊத்து பகுதிக்கு செல்வதற்கு ஒரு அரசு பஸ்சின் இயக்கம் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தோட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று வர வசதியாக ஊத்து பகுதிக்கு அப்பஸ்சை முறையாக இயக்கிட அரசு போக்குவரத்து கழகம் முன்வரவேண்டும்.


Tags : Bath , Permission,Manimuttaru ,Tourist ,Expectations
× RELATED அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது: பிரதமர் மோடி